×

அமைச்சர் கே.என்.நேரு தகவல் 100 நாள் வேலை திட்டத்துக்காக பேரூராட்சிகளுக்கு ரூ.200 கோடி

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி எழுப்பி குமாரபாளையம் எம்எல்ஏ பி.தங்கமணி (அதிமுக): நகராட்சி, பேரூராட்சிகளை மறுவரையறை செய்யும்போது அருகில் இருக்கும் ஊராட்சிகளையும் சேர்த்து இணைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். நகராட்சிகளுடன் இணைப்பதற்கு ஊராட்சி பகுதிகளைச் சேர்க்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில் உள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு: நகராட்சிகளுடன் இணைக்கும்போது நூறுநாள் வேலைத்திட்டம் பறிபோய்விடும் என கருதி, ஊராட்சி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி பகுதிகளை போல பேரூராட்சிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டம் செயல்படுத்துவதற்காக நடப்பாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சி மக்களும் பயன்பெறுவார்கள். ஊராட்சி பகுதிகளை நகராட்சிகளுடன் இணைக்கும்போது அரசு நிர்வாக வசதியை மக்கள் எளிதாக பெற முடியும். முன்னேற்றத்திற்கான வழி என்பதால் அவ்வாறு செய்கிறோம் என்றார்.

  • அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் 1000 ஆண்டு கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி
    பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன்(அதிமுக): தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாமன்னர் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 2018ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற வேண்டியது; இன்னும் நடைபெறவில்லை. கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தி, அந்த தெப்பக்குளத்தை சீரமைத்து, முழு நேர அன்னதானத் திட்டமும், அதேபோன்று மாமன்னர் முடிசூடி 600 ஆண்டுகள் கடந்ததை அரசு விழாவாக நடத்த அமைச்சர் பரிசீலினை செய்ய வேண்டும்.
    அமைச்சர் பி.கே.சேகர்பாபு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் தற்போது 100 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கோயிலின் அன்னதான வைப்பு நிதியாக ரூ.20 லட்சம் தான் இருக்கின்றது. கோயிலின் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.6 கோடி மதிப்பீட்டிற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. உபயதாரர்கள் எதிர்பார்க்கப்படுகின்றார்கள். உபயதாரர்கள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தமிழக முதல்வர் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடியை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறார். அந்த ஒதுக்கீட்டில் வழங்கப்படும் நிதியில் ஒரு பகுதியை இந்த காசி விஸ்வநாதர் கோயிலின் திருப்பணிகளுக்கு பயன்படுத்தி உறுப்பினர் கோரிய வகையில் முதல் கட்டமாக திருப்பணியை முழு வேகத்தோடு சிறந்த முறையில் நடத்தி முடிக்கப்படும்.
  • அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தகவல் பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
    சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கீழ்ப்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி(திமுக): கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி ஆவூரிலுள்ள ஆரம்ப பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. அந்த கட்டிடத்தைக் கட்ட வேண்டுமென்று சொல்கிறபோது, அந்தக் கட்டிடம் நீர்நிலைப் புறம்போக்கில் இருக்கிறது என்று தற்போது தடுக்கிறார்கள். ஆகவே, வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர். ஆகவே, அந்த ஆரம்பப் பள்ளி கட்டிடங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியை பொறுத்தவரைக்கும் நபார்டு வங்கியின் மூலமாக கிட்டத்தட்ட 608 பள்ளிகளுக்கு சுமார் 3,265 வகுப்பறைகள் கட்டுகிற திட்டம் ரூ.1,158.51 கோடியில் அதற்கென தனியாக ஒரு கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 10 பள்ளிகளுக்கு 10 கலையரங்கங்கள் அமைப்பதாக இருந்தாலும் சரி, 146 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, 51 ஆய்வகங்கள் ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, தற்போது நிர்வாக அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் வந்தவுடன் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் பராமரிப்புக்கென ஏற்கனவே ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டுக்கென தனியாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • பேரவையில் இன்று
    தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டம் காலை, மாலை என இருவேளை நடைபெறும். காலை 10 மணிக்கு கூடியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசி, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவர். பின்னர் மாலை 5 மணிக்கு கூடும் கூட்டத்தில் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

The post அமைச்சர் கே.என்.நேரு தகவல் 100 நாள் வேலை திட்டத்துக்காக பேரூராட்சிகளுக்கு ரூ.200 கோடி appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Kumarapalayam ,MLA ,P. Thangamani ,AIADMK ,Legislative Assembly ,
× RELATED தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு