×

மசினகுடி-தெப்பக்காடு சாலையில் கூட்டமாக வலம் வரும் காட்டு யானைகள்: சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு

ஊட்டி: முதுமலையில் பசுமை திரும்பியுள்ளதால், மசினகுடி-தெப்பக்காடு சாலையில் வலம் வரும் காட்டு யானைகள், மான்கள் மற்றும் காட்டு மாடுகளை கண்டு சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். ஜூன் மாதம் துவங்கினாலே, நீலகிரி மாவட்டத்தில் பசுமை திரும்பிவிடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்யும் கோடை மழை மற்றும் ஜூன் மாதம் துவக்கம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்யும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் உள்ள வனங்களில் பசுமை திரும்பும். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வனங்களில் பசுமை திரும்பும். இது போன்ற சமயங்களில் சாலையோரங்களிலேயே வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும். இதனால், இவ்வழித்தடத்தில் செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த வன விலங்குகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இம்முறை நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில தினங்கள் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, தெப்பக்காடு, ஆனைக்கட்டி, வாழைத்தோட்டம், பொக்காபுரம், சிறியூர், சிங்காரா போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது இப்பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக இப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, மசினகுடி உட்பட அனைத்து பகுதிகளும் தற்போது பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. பச்சை பசேல் என காட்சியளிக்கும் முதுமலையில் சாலையோரங்களில் காட்டு யானை, காட்டு மாடுகள், மான்கள் என பல்வேறு விலங்குகளையும் காண முடிகிறது. இவைகள் சாலையோரங்களில் வலம் வருகின்றன.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வலம் வரும் காட்டு யானைகள் கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். சில சமயங்களில் சிறுத்தை, கரடி மற்றும் புலிகளும் தென்படுவதால், இவ்வழியாக மைசூர் உட்பட கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

மசினகுடி-தெப்பக்காடு சாலையில் தற்போது அடிக்கடி வலம் வரும் காட்டு யானைகள் கூட்டமே சுற்றுலா பயணிகள் கண்களுக்கு அதிகம் தென்படுகிறது. அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். அதேசமயம், சில சுற்றுலா பயணிகள் காட்டு யானைகளை பார்த்தவுடன் சாலைகளில் வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர். இதனால், விபத்து அபாயமும் தொடர்கிறது. எனவே, இதனை வனத்துறையினர் கண்காணிப்பது அவசியம்.

 

The post மசினகுடி-தெப்பக்காடு சாலையில் கூட்டமாக வலம் வரும் காட்டு யானைகள்: சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு appeared first on Dinakaran.

Tags : Masinagudi-Theppakkad road ,Mudhumalai ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் ஓணம் கொண்டாட வரும்...