×

திருமணம் நின்றதால் விரக்தி: ரயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

புதுச்சேரி: நிச்சயித்த திருமணம் நின்று போனதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வாலிபர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த பங்கூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விமலா. இவரது மகன் பாஸ்கரன் (28). புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாஸ்கரன் நேற்றிரவு சின்னபாபுசமுத்திரம் செல்லும் வழியில் கண்டியாங்குப்பம் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் முன் திடீரென பாய்ந்துள்ளார். இதில் ரயில்மோதி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அவரை ஏற்றி சின்னபாபுசமுத்திரம் ரயில்நிலையத்தில் அவரை இறக்கி ஆம்புலன்சில் ஏற்றி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணம் நின்றதால் விரக்தி: ரயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...