×

சாட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து மாஜிஸ்திரேட் ஆராய வேண்டிய அவசியமில்லை: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: சாட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து மாஜிஸ்திரேட் ஆராய வேண்டிய அவசியம் இல்லையென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இளம்பிறையன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘2018ல் என் நண்பரை அவரது வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டுக்கு நடந்து சென்றேன். ராஜபாளையம் போலீசார் என் சாதியை சொல்லி திட்டி, தாக்கி என் மீது பொய் வழக்கு பதிந்தனர். போலீசார் தாக்கியதில் எனது காது, மூக்கு, கண் உள்பட பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்திய ேபாது நடந்த விவகாரம் குறித்து புகார் அளித்தேன். அவர் நிராகரித்து விட்டார். என் மீதான பொய் வழக்கை ரத்து செய்து, எனது மனுவை விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தனபால், ‘‘மனுதாரர் புகாரை மாஜிஸ்திரேட் முறையாக விசாரிக்கவில்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். சாட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து மாஜிஸ்திரேட் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்றச்சாட்டு கூறப்படும்போது அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளதா, இல்லையா என பரிசீலிப்பது மட்டும் தான் மாஜிஸ்திரேட்டின் பணி. மனுதாரர் விவகாரத்தில் மாஜிஸ்திரேட் எதையும் முழுமையாக விசாரிக்க தவறிவிட்டார். எனவே மனுதாரர் மீதான வழக்கு மீண்டும் ராஜபாளையம் மாஜிஸ்திரேட்டிடம் அனுப்பப்படுகிறது. முறையாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

The post சாட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து மாஜிஸ்திரேட் ஆராய வேண்டிய அவசியமில்லை: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Virudhunagar district… ,Dinakaran ,
× RELATED ரயில்வே துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம்