×

மதுரையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது தமிழ்நாட்டில் வெப்பநிலை இன்று 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருவதால், இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வெயில் நிலவரத்தைப் பொறுத்தவரையில் நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், கமுதி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் ஆகிய இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக சிவகங்கை, சாத்தூர், புதுக்கோட்டையில் 105 டிகிரி, மேலூர், வாடிப்பட்டி, காரைக்குடி, கீரனூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், துறையூர், முசிறி, விழுப்புரம், பெண்ணாடம், நெய்வேலி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டையில் 102 டிகிரி,மணப்பாறை, திண்டுக்கல், நத்தம் திருச்சி, திருக்கோயிலூர், செஞ்சி, திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரத்தில் 100 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் உணரப்பட்டது. தஞ்சாவூரில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. கடலூர், திண்டுக்கல், மதுரை, சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், சென்னை, நீலகிரி, ஈரோடு, நாகப்பட்டினம், திருநெல்வேலி, வேலூர், திருவள்ளூர், கோவை, திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் உணரப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், வெப்பநிலையை பொறுத்தவரையில் இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். வெயில் 100 டிகிரி முதல் 105 டிகிரி வரையும் இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post மதுரையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது தமிழ்நாட்டில் வெப்பநிலை இன்று 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...