×

மதுரையில் சித்திரைத்திருவிழாவில் குவிந்த 300 டன் குப்பைகள் ஒரேநாளில் அகற்றம்: தூய்மைப்பணியாளர்கள் அதிரடி

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு குவிந்த 300 டன் குப்பைகளை ஒரே நாளில் அகற்றி மாநகரை சுத்தம் செய்த தூய்மைப்பணியாளர்களை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் பாராட்டினார்.மதுரையின் பெருமைக்குரிய சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வை காண மதுரை மட்டுமல்லாது சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும், அருகாமை மாவட்டங்களில் இருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் குவிந்தனர். அழகரை காண வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர், அன்னதானம் என பலரும் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனால் ஆங்காங்கே பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் தட்டு, பாக்கு மட்டை தட்டு என குப்பைகள் அதிகம் சேர்ந்தன. சாலை முழுவதும் குப்பைகளான நிலை ஏற்பட்டது.இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் தலைமையில், மதுரை நகர் நல அலுவலர் வினோத்குமார் மேற்பார்வையில் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அழகர் வைகை ஆற்றில் எழுந்தளுளிய நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் சுமார் 1,135 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகளை சிரத்தையுடன் செய்திட 17 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 5 சுகாதார அலுவலர்கள் தலைமையில் 16 குழுவினர் சுழற்சி முறையில் இயங்கினர். திருவிழா நடைபெறும் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற சிறப்பு பணிக்காக நாளொன்றிக்கு 30 டிராக்டர்கள், 37 லாரிகள் பயன்படுத்தப்பட்டன.

இதற்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் சேர்ந்த குப்பைகள் அனைத்தும் நேற்று ஒரேநாளில் அகற்றப்பட்டது. இதன்படி அகற்றப்பட்ட குப்பகைள் 300 டன் எடையுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். மேலும், தொடர்ந்து திருவிழா நடைபெற்றும் பகுதிகளில் தினமும் சுகாதார நடவடிக்கைகளாக சுண்ணாம்பு மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு தொற்று நோய் பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதற்கிடையே வைகையில் அழகர் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் 50 எண்ணிக்கையில் குடிநீர் தொட்டிகள் அமைத்து சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது. இதற்காக 16 சிறப்பு குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரினேஷன் அளவு குறித்து உறுதி செய்யப்பட்டது. பக்தர்களுக்காக முக்கிய இடங்களில் ஆண்களுக்கு 110, பெண்களுக்கு 106 என நிரந்தர மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தது.

கோடை மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு தொல்லைகளை நீக்க முன்பயணத்திட்டம் வகுத்து 10 குழுக்கள் அமைத்து மக்கள் கூடும் இடங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் கொசு புகை மருந்து அடித்து எவ்வித சுகாதார சீர்கேடும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.திருவிழா காலங்களில் உணவகம், அன்னதானம் வழங்கும் மற்றும் தயாரிக்கும் இடங்கள் குளிர்பானம் தயாரிக்கும் இடங்கள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் இடம் என அனைத்து இடங்களிலும் 7 சிறப்பு குழுக்கள் அமைத்து உணவு பாதுகாப்பு துறை மூலமாக கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் நகரில் குவிந்த குப்பைகளை உடனடியாக அகற்றிய பணியை சிறப்பாக மேற்கொண்ட தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறையினரையும் கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் பாராட்டினார்.

The post மதுரையில் சித்திரைத்திருவிழாவில் குவிந்த 300 டன் குப்பைகள் ஒரேநாளில் அகற்றம்: தூய்மைப்பணியாளர்கள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Madurai festival ,Madurai ,Chitra festival ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...