சென்னை: தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பா.ஜ.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படியும் தவறு. அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்க்கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
The post தேசிய மலரான தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.