×

2025 – 26ம் ஆண்டுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு: அக்.15ல் ரஞ்சி கோப்பை துவக்கம்

புதுடெல்லி: நடப்பு 2025-26ம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது. பிசிசிஐயின் அறிவிப்புப்படி, உள்ளூர் போட்டிகளில் முதலாவதாக துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், வரும் ஆகஸ்ட் 28ம் தேதி துவங்கி, செப். 15ம் தேதி வரை நடக்கவுள்ளன. அதன் பின், இரானி கோப்பை போட்டிகள், அக். 1 முதல் 5ம் தேதி வரை, நாக்பூரில் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இரு கட்டமாக நடத்தப்படும். முதல் கட்ட போட்டிகள், அக். 15 முதல் நவ. 19ம் தேதி வரையும், 2ம் கட்ட போட்டிகள், வரும் 2026 ஜன. 22 முதல் பிப். 1ம் தேதி வரை நடைபெறும். இதற்கு இடையே, சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டிகள், நவ. 26ம் தேதி துவங்கி, டிச. 8ம் தேதி வரை, லக்னோ, ஐதராபாத், அகமதாபாத், கொல்கத்தா நகரங்களில் நடத்தப்படும். நாக்அவுட் போட்டிகள், இந்துாரில், டிச. 8 முதல் 18ம் தேதி வரை நடைபெறும்.

கடைசியாக, விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள், டிசம்பர் 24ல் துவங்கி, ஜன. 8ம் தேதி வரை, அகமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு நகரங்கில் நடைபெறும். நாக்அவுட் போட்டிகள், ஜன. 12 முதல் 18ம் தேதி வரை நடக்கும். அனைத்து முக்கிய உள்ளூர் போட்டிகளுக்கும் குரூப்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.

அதன்படி, விதர்பா, தமிழ்நாடு, மும்பை, கர்நாடகா, டெல்லி ஆகிய அணிகள், ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளுக்கான போட்டிகளில் எலைட் பிரிவில் இடம்பெறும். மேகாலயா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் ஆகிய அணிகள், பிளேட் பிரிவில் இடம்பெறும். இந்த மாற்றங்கள் மூலம், போட்டிகளில் பாரபட்சமின்மை நிலவும் என்றும், நாடு முழுவதும் எல்லா அணிகளுக்கும் சீரான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post 2025 – 26ம் ஆண்டுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு: அக்.15ல் ரஞ்சி கோப்பை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : 2025-26 ,Ranji Cup ,New Delhi ,Board of Control for Cricket in India ,BCCI ,Duleep Cup ,Dinakaran ,
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும்...