நெல்லை: ‘லிவிங் டுகெதரில்’ ஒரே வீட்டில் வாழ்ந்தவர், வேறொரு பெண்ணுடன் பழகியதால் கிணற்றில் மகளை தள்ளிக்கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்கப்பட்டார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரும் ஜோதி (34) என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரே வீட்டில் ‘லிவிங் டுகெதர்’ முறையில் தம்பதியாக வாழ்ந்துள்ளனர்.
இவர்களது மகள் ஆனிரோஸ் (11). அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அரசு ஊழியருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜோதி கேட்டதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை. இதில் மனம் உடைந்த ஜோதி, மகள் ஆனிரோஸிடம், ‘தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அவர் இனி நம்மிடம் அன்பாக இருக்க மாட்டார். இதனால் நாம் இருவரும் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம்’ என்று கூறி நேற்று முன்தினம் மதியம் வெளியே அழைத்துள்ளார்.
இதையடுத்து 2 பேரும் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகரில் உள்ள கிணறுக்கு சென்றனர். அங்கு மகள் ஆனிரோசைகிணற்றுக்குள் தள்ளிவிட்டு ஜோதியும் கிணற்றில் குதித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அம்பை தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் இறங்கி ஜோதியை உயிருடன் மீட்டனர். ஆனிரோஸ் நீரில் மூழ்கி இறந்ததால் சடலத்தை மீட்டனர்.இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார், ஜோதி மீது கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மணப்பெண் கிடைக்காததால் மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
தேனி மாவட்டம், போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). சலவைத் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களின் மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். மகன் சுரேந்தர் (37), மாற்றுத்திறனாளி என்பதால் யாரும் பெண் தர முன்வரவில்லை. இதனால் தாய் பரமேஸ்வரி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் விஷ விதைகளை பறித்து வந்து அரைத்து மகனுக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்துள்ளார். வாந்தி எடுத்து மயங்கிய இருவரையும் அப்பகுதியினர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்தர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். பரமேஸ்வரியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
The post ‘லிவிங் டுகெதர் கணவர்’ வேறொரு பெண்ணுடன் பழகியதால் மகளை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.