×

ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலை வாலிபருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஆபாச படங்களை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (35). இவர் தான் லீசுக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் 13 வயது சிறுமியை கடந்த 2019 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை தினமும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமியை ஓவிய வகுப்புக்கும் கூட்டி செல்வதாக கூறி பார்க், மால்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும், தனக்கு வாட்ஸ் அப்பில் நண்பர்கள் அனுப்பும் ஆபாச படங்களை சிறுமிக்கு காட்டி பாலியல் ஆசையை தூண்டியுள்ளார். சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் சிறுமியை வெளியே அழைத்து செல்ல முடியாததால் பாலியல் தொடர்பான ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதை தனது பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளார். கடந்த 2020 ஜூன் 14ம் தேதி வீடியோவை வெளியிட்டுள்ளதாக சிறுமிக்கு குணசீலன் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை பார்த்த சிறுமி, விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என பயந்து படுக்கையறை மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சிறுமியின் ெபற்றோர் கொடுத்த புகாரின்படி, போலீசார் சிறுமிக்கு குணசீலன் அனுப்பிய மெசேஜை ஆய்வு செய்தனர். சிறுமியின் தற்கொலைக்கு குணசீலன்தான் காரணம் என்று தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் மீது மரணத்திற்கு தூண்டுதல், பாலியல் தொந்தரவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு, போக்சோ பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி சாட்சிகளிடம் விசாரித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் குணசீலனுக்கு போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவில் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த பிரிவில் 5 ஆண்டுகள் சிறையும், தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவில் 2 ஆண்டுகள் சிறையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறையும் ரூ.1 லட்சம் அபராதமும், போக்சோ சட்டத்தில் மேலும் 2 பிரிவுகளில் தலா ரூ.25 ஆயிரமும் விதிக்கப்படுகிறது.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அபராத தொகை ரூ.3 லட்சத்தை இறந்துபோன சிறுமியின் பெற்றோருக்கு தரவேண்டும். அந்த தொகையை தர முடியவில்லை என்றால் குற்றவாளி குணசீலனின் அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலை வாலிபருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Chennai ,
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...