×

இந்த வாழ்க்கையைத் தந்ததே பருத்திப்பால்தான்!

“பிழைப்புக்காகத்தான் சென்னை வந்தேன். இங்க பிழைக்க முடியலை. ஊருக்கே போயிடலாம்னு பல தடவை திரும்பி போயிருக்கேன். திரும்ப ஒரு நம்பிக்கையோட சென்னை வருவேன். இது மாதிரி சென்னைக்கும், சொந்த ஊருக்கும் மாறி மாறி போயிக்கிட்டு இருந்தவன இப்ப இந்த பருத்திப்பால்தான் சென்னைல நிலையா வாழ்ற மாதிரி பண்ணிருக்கு. பசி இல்லாம சாப்பிடுறோம். பசங்கள ஓரளவு நல்லா படிக்க வைக்குறோம். எல்லாமே பருத்திப்பால் தந்த வாழ்க்கதான்… ண்ணே…’’ மதுரைத்தமிழில் ஒரு குழந்தை போல் பேசுகிறார் பருத்திப்பால் வடிவேல்.

ஓட்டல் தொழிலாளி, கொத்தனார், பெயின்டர், பிளாட்பார வியாபாரி என பல வேலைகளைச் செய்துவந்த வடிவேலு கடந்த 6 ஆண்டுகளாக பருத்திப்பால் விற்பனையில் ஈடுபடுகிறார். கே.கே.நகர் முனுசாமி சாலையில், பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் ஒரு தள்ளுவண்டியில்தான் பருத்திப்பால் கடையை நடத்திவருகிறார். பருத்திப்பாலுடன், உளுந்தங்கஞ்சி, நவதானிய சுண்டல் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறார். எல்லாமே வெறும் 15 ரூபாய்தான் விலை. விலை குறைவாக இருந்தாலும் சுவை அள்ளுகிறது. இதனால் மாலை நேரங்களில் பலர் தங்களது குடும்பங்களுடன் வந்து பருத்திப்பால், உளுந்தங்கஞ்சி அருந்துகிறார்கள்.

ஒரு மாலைவேளையில், அலுமினியப் பாத்திரத்தில் சுடச்சுட நிரம்பியிருக்கும் பருத்திப்பாலை அகழ்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்த வடிவேலுவைச் சந்தித்தபோது தனது பருத்திப்பால்விற்பனை அனுபவம் குறித்து தொடர்ந்து பேசினார்.“எங்க சொந்த ஊரு வி.மலம்பட்டி சிவகங்கை மாவட்டத்துல இருக்கு. மதுரை மாவட்டத்தை ஒட்டி இந்த ஊரு இருக்குறதால நான் மதுரைக்காரன்னே சொல்லிக்குவேன். என் மனைவிசுமதிய காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு பிரபாகரன், ஆதவன், அகிலன், கார்த்திகேயன்னு 4 பசங்க இருக்காங்க. 9ம் வகுப்புதான் படிச்சிருக்கேன்.

சினிமா கனவோட சென்னை வந்து கஷ்டப்படுவறங்கள்ல நானும் ஒருத்தன். 2005ம் வருசம் ஊருல இருந்து சென்னை வந்தேன். அப்பல்லாம் எனக்கு கல்யாணம் ஆகல. இங்க வந்து ஓட்டல், டீக்கடை, கொத்தனார், பெயின்டர், ஸ்டேஜ் டெக்கரேஷன்னு கிடைக்குற வேலைய செஞ்சேன். ஆனாலும் சென்னைல காலம் தள்ள கஷ்டமா இருந்துச்சி. அதனால திரும்பவும் சொந்த ஊருக்கு போயிட்டேன். அங்க இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு பானிபூரி கடைல வேலை பாக்குறதுக்காக போனேன். அங்க வேலை செஞ்சி சொந்தமா பானிபூரி கடை வச்சேன். ஆனா பானிபூரி வியாபாரம் என் மனசை ரொம்ப பாதிச்சது.

இனிமே இந்த வியாபாரத்தை செய்யக்கூடாதுன்னு நினைச்சேன். இடையில 2011ம் வருசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குடும்பத்தைக் காப்பாத்தணும்னு திரும்ப சென்னை வந்தேன். மறுபடி வேறு, வேறு வேலைகளை செஞ்சேன். பிளாட்பாரத்தில பெல்ட், மணிபர்ஸ் வித்தேன். சொல்லிக்கிற மாதிரி வருமானம் கிடைக்கல. கடன் அதிகமாச்சு. ஊருல இருக்குற நிலத்தை வித்தேன். மனைவியோட நகைகளும் பறிபோச்சு. யாருக்காவது போன் பண்ணுனா பணத்துக்காகத்தான் பண்றேன்னு போனை எடுக்க மாட்டாங்க. இந்த சமயத்துலகுடும்பத்தை சென்னைல விட்டுட்டு நான் மட்டும் மதுரைக்கு போனேன்.

அங்க இருக்கும்போது ஒரு இடத்தில பருத்திப்பால் சாப்பிட்டேன். இந்த வியாபாரத்தை நாம ஏன் சென்னைல செய்யக்கூடாதுன்னு அப்பதான் தோணுச்சு.அந்த அண்ணன்கிட்ட பருத்திப்பால் எப்படி செய்றதுன்னு கேட்டேன். சொல்லவே மாட்டேன்னுட்டாரு. அப்புறம் முனி சாலை, பெரியார், ரயில்வே ஸ்டேஷன், புதூர்னு நிறைய இடங்கள்ல இருக்குற பருத்திப்பால் கடைக்காரங்களைக் கேட்டேன். அவங்களும் சொல்லிக் குடுக்க மாட்டேன்னுட்டாங்க.ஆனா நாம் இந்த வியாபாரத்தைத் தான் சென்னைல போய் செய்யணும்னு உறுதியா இருந்தேன். பருத்திக்கொட்டைல இருந்துதான் பருத்திப்பால் செய்யுறாங்கன்னு தெரிஞ்சி மதுரைல இருந்து பருத்திக்கொட்டைகளை வாங்கிட்டு சென்னை வந்துட்டேன். அப்போ என்கிட்ட பட்டன் போன்தான் இருந்துச்சி. ஒரு நண்பரோட போனை வாங்கி, அதன்மூலமாக யு ட்யூப் பார்த்து பருத்திப்பால் தயாரிக்குறது எப்படின்னு கத்துக்கிட்டேன்.

ஆனா அது சரியா வரலை. ஒரு தடவை சர்க்கரை அதிகமாகிடும். ஒரு தடவை தண்ணி அதிகமாகிடும். ஆனா முயற்சியை விடாம செஞ்சி பார்த்து என்னோட டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டில கே.கே. நகர், எம்ஜியார் நகர் மார்க்கெட், கோயம்பேடு மார்க்கெட்னு பருத்திப்பாலை எடுத்துக்கிட்டு போயி கூவிக்கூவி விப்பேன். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள்ல பருத்திப்பால் பத்தி எல்லோருக்கும் தெரியும். சென்னைல சரியா தெரியாது. அதனால் பெரிய அளவுக்கு வியாபரம் ஆகல. ஒருநாள் வெறும் 40 ரூபாய் மட்டும்தான் கிடைச்சுது.

செலவு பண்ண காசு கூட கிடைக்காது. இருந்தாலும் என் மனைவி சுமதி ஆறுதலா எதாவது சொல்லி மறுநாள் வியாபாரத்துக்கு அனுப்புவாங்க. பலர்கிட்ட எடுத்து சொல்லி பருத்திப்பால் கஸ்டமர்களா மாத்துனேன். என்னோட விற்பனை எல்லைகளை விரிவுபடுத்தினேன். பல குடியிருப்பு பகுதிக்கெல்லாம் எடுத்துக்கிட்டு போய் விற்பனைபண்ணுனேன். அப்புறமா கே.கே. நகர் அம்மன் கோயில் பக்கத்துல தள்ளுவண்டில வச்சி பருத்திப்பால் வியாபாரம் பண்ணேன். அங்க ஒரு பிரச்னை வந்ததால மீண்டும் லைனுக்கு போயி அலைஞ்சி விற்பனை பண்ணேன். நான் அலையுறத பார்த்த ஒரு சினிமா இயக்குநரு கே.கே.நகர் முனுசாமி சாலையில இருக்குற இந்த இடத்தில கடை வைக்க உதவி பண்ணாரு.

இங்க வந்து 6 வருசம் ஆச்சு. நல்லபடியா வியாபாரம் போகுது.இப்ப இங்க தினமும் மாலை 4.30 மணிக்கு வியாபாரத்தை ஆரம்பிப்பேன். இரவு 9 மணி வரைக்கும் வியாபாரம் ஆகும். சினிமா இயக்குநர்கள், வயதான தாத்தா, பாட்டி, சின்ன பசங்கன்னு பல பேரு வராங்க. பருத்திப்பால் பத்தி இப்ப நிறைய பேருக்கு தெரியவந்துருக்கு. மதுரைல இருந்து பருத்திக்கொட்டையை வாங்கிட்டு வந்து நைட்டெல்லாம் ஊற வச்சி, மறுநான் காலையில அரைச்சி பால் எடுப்போம். அப்புறமா அதுல சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, ஏலக்காய், அதிமதுரம், வெல்லம், பச்சரிசி, தேங்காய்த்துருவல் கலந்து காய்ச்சுவோம். இதுல வேற எதையும் கலக்க மாட்டோம். எல்லாமே இயற்கையான பொருள்ங்கறதால, சாப்பிடுறவங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. ஆனா பல நன்மை கிடைக்கும்.

பருத்திப்பால் இதயத்திற்கு நல்லது.பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பப்பை பிரச்சினைகளை சரிபண்ணும். தாய்ப்பால் நல்லா சுரக்கும். வாதம், பித்தம், கபம் சரியாகும். உடம்பில் உள்ள செல்களைப் புதுப்பிச்சி உற்சாகமா இயங்க வைக்கும். இருமல், சளி, தொண்டைப்புண் சரியாகும். இதைப்பத்தி தெரிஞ்சவங்க தொடர்ந்து வந்து வாங்கி சாப்பிடுறாங்க. பருத்திப்பால் மட்டுமில்லாம உளுந்தங்கஞ்சியும் சுடச்சுட தயார் பண்ணிக் கொடுக்குறோம். அப்புறம் தினமும் ஒரு பயறு வகை சுண்டல் கொடுக்குறோம்.

திங்கள் கிழமை பச்சைப்பயறு, செவ்வாய்க்கிழமை தட்டைப்பயறு, புதன்கிழமை நவதானியம், வியாழன் கறுப்பு கொண்டைக்கடலை, வெள்ளி ேவர்க்கடலைன்னு வித்தியாசமா கொடுக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை கடை இருக்காது. பருத்திப்பால் குடிக்க வரும் கஸ்டமர்கள் எல்லாம் நட்பா, உறவுகளா மாறுராங்க. அதுபோல வந்த பலர் என் சினிமா கனவைப் புரிஞ்சிகிட்டு நடிக்கவும் வாய்ப்பு தராங்க. இப்ப 4 பசங்கள படிக்க வைக்குறேன். சென்னையை விட்டு போயிடலாமான்னு நெனச்சவனை இங்கதான் நீ இருக்கணும்னு தெம்பு கொடுத்ததே இந்த பருத்திப்பால்தான்’’ என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் பருத்திப்பால் வடிவேல்.

– அ.உ.வீரமணி
படங்கள்: அருண்

The post இந்த வாழ்க்கையைத் தந்ததே பருத்திப்பால்தான்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...