×
Saravana Stores

மாங்காடு நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாகனங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம்: மீறினால் கடும் நடவடிக்கை

குன்றத்தூர்: மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் சுமா தெரிவித்துள்ளார். மாங்காடு நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அவற்றில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கோயில் நகரமான மாங்காட்டிற்கு தினமும் உள்ளூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதுமட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதிகள் நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், தற்போது செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களுக்கு மக்களிடையே தேவைகள் அதிகரித்துள்ளது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு சில தனியார் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள், பொதுமக்களிடமிருந்து அதிகளவு தொகையை கட்டணமாக வாங்கி, அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் செப்டிக் டேங்க் உள்ளே சுத்தம் செய்ய இறங்கும் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு, மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களுக்கு ‘லைசென்ஸ்’ கட்டாயம் என்ற முறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இனிமேல் நகராட்சியில் லைசென்ஸ் பெற்ற வாகன ஓட்டிகள் மட்டுமே இந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். தவறும் வாகன உரிமையாளர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையர் சுமா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு, கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022ம் ஆண்டு புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க லைசென்ஸ், அவர் விண்ணப்பித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் மட்டுமே. இவ்வாறு, லைசென்ஸ் பெற்ற செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நகராட்சி நிர்வாகத்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற நபர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து, சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

The post மாங்காடு நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாகனங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம்: மீறினால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kunradthur ,Mangadu Municipality ,Dinakaran ,
× RELATED காதலன் பிரிந்து சென்றதால் விரக்தி...