×
Saravana Stores

சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொத்துக்களில் உரிமை கோருவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோரின் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2011-ல் உத்தரவிட்டது. இதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொந்தமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது. அதே நேரம், பரம்பரை சொத்துக்களில் அவர்கள் உரிமை கோர முடியாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் மற்றும் சட்டப்படி பிரியாத தம்பதியரின் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக சொத்துக்களில் பங்கு கோரும் உரிமை உள்ளது. இந்து வாரிசு சட்டத்தின்படி, சட்டப்பூர்வ ஆங்கீகாரம் உள்ளது என்று தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, பெற்றோரின் உழைப்பில் சம்பாதித்த சொத்து மற்றும் பரம்பரை சொத்துக்களின் பங்கு கோர அவர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணங்களை தண்டனை...