×
Saravana Stores

ஓசூர் சர்வதேச விமான நிலைய பணியை விரைவுபடுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 3 கோடிபயணிகளைக் கையாளக்கூடிய ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 27ம் தேதி அறிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், 3,000 ஏக்கர் அளவுக்கு காலி இடம் இருக்கும் சோமனஹள்ளி என்ற இடத்தில் பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டால், பெங்களூருவின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில், ஓசூருக்கு அருகில் உள்ள சோமனஹள்ளியில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

எது எப்படியோ, ஒசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓசூர் சர்வதேச விமான நிலைய பணியை விரைவுபடுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Hosur International Airport ,O. Paneer ,Chennai ,Former Chief Minister ,O. Paneer Selvam ,Hosur ,Krishnagiri, Dharmapuri ,
× RELATED மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை...