×

மரம், செடி, கொடிகள், புல் வகைகளை நட்டு வைத்து இயற்கை சூழலை பாதுகாத்தால் நிலச்சரிவை தடுக்கலாம்

சூழலியல் ஆர்வலர்கள் முன் வைக்கும் ஆலோசனைகள்

மூணாறு : கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 380க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மாயமானவர்களையும் தேடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு இடையே நிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன? எங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்படும் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது.

நிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது?

பூமிக்கடியில் இருக்கும் பாறைகள், மணற்பரப்பு திடீரென நகர்வதால் ஏற்படும் விளைவே நிலச்சரிவாக இருக்கிறது. இதிலும், மலைப்பாங்கான இடங்களில் கற்கள் மற்றும் மணற்பிடிப்புகள் நகர்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல், உருவவியல் மற்றும் தட்பவெட்பம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது, நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் போன்ற புறக்காரணங்களும், தவிர மனித செயல்பாடுகளும் காரணமாக இருந்துவிடுகின்றன.

பொதுவாகப் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன. இவற்றோடு சேர்ந்து இயற்கை சூழலில் மனித செயல்பாடுகளாலும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஒரு நிலச்சரிவு ஏற்பட, அதீத மழையோ, நிலநடுக்கம் போன்ற காரணிகள் இருந்தாலும், பல சமயங்களில் மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால்கூட நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

புவியியல் காரணம் என்று பார்க்கும்போது, ஓரிடத்தில் இருக்கும் மணற்பரப்பு, பாறை போன்றவை வலுவிழப்பது, பாறைத்தட்டுகள் பலவீனப்படுவது போன்றவற்றை குறிக்கும். ஓரிடத்தில் ஆழ வேறூன்றும் மரங்கள் இல்லாத சமயத்தில், பூமிப்பரப்பு மிகவும் இளகுவாக இருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும், அதிக மழைப்பொழிவு போன்றவை எளிதில் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன.

உருவவியல் என்று பார்த்தால், நிலத்தின் உருவம், அமைப்பைப் பொறுத்து இருக்கின்றன. இதிலும், வறட்சி போன்ற காரணங்களால் தாவரங்களின் பிடிப்பு அகலும்போது மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு போன்றவை ஏற்படுகின்றன. இதில், மனிதர்களின் செயல்பாடுகளும் நிலச்சரிவுக்கு பெரும் காரணங்களாக அமைகின்றன. பூமியில் உயிர்கள் உருவாகுவதற்கு முன்பாகவே தோன்றிவிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை, மிகவும் வலிமையான மலையாகவே பார்க்கப்படுகிறது.

சூழலியல் ஆர்வலர்கள் கூற்றுப்படி, வலிமையாக பாறைகளைக் கொண்டுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் நிலச்சரிவு ஏற்படுகிறது என்றால், இது மனிதர்களே ஏற்படுத்திய பேரிடர் என்று கூறுகின்றனர். சூழலியல் ரீதியாக மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் மனித ஆக்கிரமிப்பு, இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளை தவிர்ப்பது ஒன்றுதான் இதுபோன்ற பேரழிவுகளை தவிர்க்க நாம் எடுக்கும் முன்னெடுப்பாக இருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

நிலச்சரிவை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி, இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய நிலவியல் ஆய்வு மையம் (Geological Survey of India – GSI), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கனமழை குறித்தும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் பற்றியும் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கி வருகின்றன. ஆனால், அந்த முன்னறிவிப்புகள் துல்லியமாக இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மழைப்பொழிவின் வரலாற்றுப் பதிவுகள், நிகழ்நேர செயற்கைக்கோள் படங்கள், மலைச்சரிவுகளின் மண் பரப்பு ஆகியவற்றின் தரவுகளை வைத்து நிலச்சரிவுகளைக் கணிக்கும் நிலச்சரிவு முன்னறிவிப்பு அமைப்பைக் கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி துவங்கி வைத்தார். இந்த முன்னறிவிப்பு மையங்கள் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா முழுக்க நிலச்சரிவு குறித்த முன்னறிவிப்புகளை வழங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிலும் நிலச்சரிவுகளைத் துல்லியமாக முன்கூட்டியே கணிப்பதில் சில சவால்கள் இருக்கின்றன.

கணிப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?

இந்தியாவில் ‘நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை’ இந்திய நிலவியல் ஆய்வு மையம் அடையாளப்படுத்தி வரைபடத் தொகுப்பாகப் பதிவு செய்துள்ளது. இருப்பினும் குறிப்பாக, எந்த நேரத்தில், எந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படும் என்பதைக் கணிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் அந்த ஆய்வுகளும் தொழில்நுட்பங்களும் குழந்தைப் பருவத்திலேயே இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தத் தொழில்நுட்பங்கள் ஆய்வு அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை அவற்றை முழுமையாகப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதில் சில சவால்கள் இருப்பதாக வல்லுநர்கள் அனைவரும் ஒருமனதாகக் கூறுகின்றனர்.

நிலச்சரிவு ஏற்படுவதில் முக்கிய உடனடிக் காரணிகளாக இருப்பவை மழைப்பொழிவு, மண்ணின் ஈரப்பதம் ஆகிய இரண்டும்தான். ஆனால், இவற்றைக் கணித்துத் துல்லியமாக இந்த இடத்தில்தான் நிலச்சரிவு ஏற்படப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதாவது, முன்னறிவிப்பு அமைப்புகளால் மழைப்பொழிவு அளவை வைத்து வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆபத்து இருப்பதாக முன்னறிவிக்க முடியும். ஆனால், துல்லியமாக எங்கே, எந்த நேரத்தில் எனச் சொல்லிவிட முடியாது. இத்தகைய நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கைகள் கூறுவது சில வேளைகளில் நடக்காமலும் போகலாம். அவை துல்லியமாக இருக்காது.

சவாலாக இருக்கும் இந்திய நிலப்பரப்பு

இந்தியாவில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளின் அளவு, இத்தாலி நாட்டின் மொத்த நிலப்பரப்புக்கு நிகரானது. ஆகவே, நிலச்சரிவை முன்கூட்டியே கணிக்கும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இத்தாலி, ஹாங்காங், ஜப்பான் போன்ற அளவில் சிறிய நாடுகளுக்கு அதை அமல்படுத்துவதில் பெரிய பிரச்னைகள் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவின் கதை வேறு. நிலச்சரிவைப் பொறுத்தவரை, நம்மிடம் இப்போதிருக்கும் தொழில்நுட்பங்களை வைத்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மட்டுமே நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அது ஏற்படப்போகும் நேரத்தையோ, இடத்தையோ துல்லியமாகக் கணிக்க முடியாது.

தடுக்கும் வழிமுறைகள்

நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் எங்கெல்லாம் மரம், செடி, கொடிகள், புல் வகைகள் நடமுடியுமோ அங்கெல்லாம் நம் நாட்டு மரக்கன்றுகள், புதர் செடிகள், தாவரங்கள் போன்றவற்றை நட்டு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தாவரப் போர்வையற்று நிலச்சரிவு ஏற்பட்ட இப்பாழ் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதிக்கக்கூடாது. காட்டுத் தீயிலிருந்தும் இம்மலைப் பகுதிகளைக் காப்பாற்ற வேண்டும். இயற்கை சூழலை பேணிப் பாதுகாப்பதே அல்லாமல் வேறு செயற்கை பணிகளையோ, வளர்ச்சி பணிகளையோ நிலச்சரிவு ஏற்பட்ட சேதமடைந்த இந்நிலங்களில் அனுமதிக்ககூடாது.

தண்ணீர் ஓடிச்செல்லும் பாதையில் எல்லாம் குறிப்பாக சதுப்பு நிலங்களில் நடத் தகுந்த மரங்களான நீர்மருது, மூங்கில், நாவல் அத்தி, புன்னை போன்றவற்றையும், மண் வளத்தை பாதுகாக்கும் புல் தாவரங்களான வெட்டிவேர், எலுமிச்சைப் புல், கினிபுல் போன்றவற்றையும் நட வேண்டும். ஓடைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பான நீரோட்டத்திற்கு உறுதியளிக்க வேண்டும். மலைச்சரிவுகளில் உள்ள நிலச்சரிவைத் தடுக்க வாய்க்கால்களை மீன்முள் போன்ற வடிவத்தில் அமைத்து, தண்ணீரை பாய்ந்தோடச் செய்ய வேண்டும்.

புவியியல் கண்ணோட்டத்தோடு நிலச்சரிவு ஏற்படுவது பற்றி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு மரங்களை அழித்ததுதான் முக்கியமான காரணம் என்று பரவலாக நம்பப்பட்டாலும் புவியியல் அமைப்பை ஆராய்ந்து சரியான தடுப்பு முறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

The post மரம், செடி, கொடிகள், புல் வகைகளை நட்டு வைத்து இயற்கை சூழலை பாதுகாத்தால் நிலச்சரிவை தடுக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Wayanad, Kerala ,Dinakaran ,
× RELATED மூணாறில் காரை சேதப்படுத்திய காட்டுயானைகள்: பொதுமக்கள் பீதி