×

வரத்து குறைவு.. தேவை அதிகரிப்பால்… தினந்தோறும் எகிறும் தேங்காய் விலை

*பட்டிவீரன்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

*வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் விளைவித்த தேங்காய்களை உரித்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் கொள்முதல் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி கோம்பை, சித்தரேவு, நல்லாம்பிள்ளை, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இப்பகுதி மொத்த வியாபாரிகள் தென்னை விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர்.

பின்னர் அவற்றை தங்களது குடோன்களில் இருப்பு வைத்து மட்டையை உரித்து காங்கேயம், மதுரை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.43 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தேங்காய் ரூ.52 முதல் ரூ.58 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல் கொப்பரை தேங்காயின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், சில விவசாயிகள் தங்களது தோப்புகளில் தேங்காய்களை இருப்பு வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது: இந்தியாவில் தென்னை சாகுபடி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் பரவலாக தென்னை விவசாயம் நடந்து வருகிறது. காங்கேயத்தில் கொப்பரை உலர்களம் மற்றும் தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகளவில் உள்ளன.

இதனால் காங்கேயம் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையிலேயே தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது வரத்து குறைந்துள்ளதாலும், ஆயுதபூஜை, தீபாவளி நெருங்கி வருவதாலும், ஒன்றிய அரசு எண்ணெய் வகைகளுக்கு வரியை கூட்டியதாலும் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெளிமாநிலங்களுக்கு தேங்காய் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.

The post வரத்து குறைவு.. தேவை அதிகரிப்பால்… தினந்தோறும் எகிறும் தேங்காய் விலை appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Dinakaran ,
× RELATED பட்டிவீரன்பட்டியில் பேரூராட்சி கூட்டம்