* தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு
* திற்பரப்பில் 4 வது நாளாக குளிக்க தடை
குலசேகரம்: குமரி மாவட்டத்தில் மோதிரமலை உள்பட மலையோர கிராமங்களில் விடிய, விடிய பெய்த கனமழையால் மலையோர கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் உடைந்ததால், போக்குவரத்து முடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மலையோர பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குமரி மலையோர பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. பலத்த மழையுடன் சூறை காற்றும் வீசியது. இந்த கன மழை காரணமாக மலையோர பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
குறிப்பாக கோதையாறு, குற்றியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த மழையால் மோதிரமலை, மாங்கா மலை, முடவன் தூக்கி, தச்சமலை உள்ளிட்ட மலையோர கிராமங்கள் அடியோடு முடங்கி போனது. இந்த பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நேற்று காலை முதல் கிராமங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர். மலையோர நீரோடைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் செய்வதறியாத நிலையில் மக்கள் தவித்தனர். குலசேகரத்தில் இருந்து நேற்று அதிகாலையில் குற்றியாறுக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. காலை 6.30க்கு இந்த பஸ் மீண்டும் பயணிகளுடன் குற்றியாறில் இருந்து குலசேகரத்துக்கு புறப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பஸ்சில் இருந்தனர்.
குற்றியாறு – மோதிரமலை சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக கட்டும் பணி ₹6 கோடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. உயர் மட்ட பாலம் அமைப்பதால் பொதுமக்கள் போக்குவரத்துக்காக தற்காலிக பாலம் அமைத்து இருந்தனர். இந்த தற்காலிக பாலம் நேற்று காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் குற்றியாறு சென்ற அரசு பஸ் மீண்டும் குலசேகரத்துக்கு வர முடியவில்லை. சுமார் 12 மலை கிராம மக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளதால், நேற்று அதிகாலையில் இருந்து கோதையாற்றில் வரும் நீரின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கீழ் கோதையாறு பகுதியில் நீர் மின் நிலையம் பிரிவு 1 க்கு அருகில், 110 அடி உயர கோதையாறு அணை உள்ளது. இந்த அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. கோதையாற்றில் வெள்ளம் மற்றும் பேச்சிப்பாறையில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால், திற்பரப்பு அருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
பாதுகாப்பு காரணங்கள் கருதி நேற்று 4வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சூறை காற்று காரணமாக பல இடங்களில் ரப்பர் மரங்கள் மற்றும் பழமையான பல்வேறு மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மின் ஒயர்கள் அறுந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மலையோர பகுதிகளில் நீரோடைகள் மூழ்கியதால் பல சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மலையோர பகுதிக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை செய்யும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் அந்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். வெள்ளம் தொடர்ந்து வருவதால், பேச்சிப்பாறை அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மலையோர கிராமங்களில் மழையால், ரப்பர் பால் வெட்டும் தொழிலும் முடங்கி உள்ளது.
காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
* கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், காளிகேசம் உள்ளிட்ட மலையோர பகுதிகளிலும் பலத்த மழையால் நேற்று காலை காளிகேசம் காட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஆறு கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றின் மறு கரையில் உள்ளவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.
* தடிக்காரன்கோணம், கீரிப்பாறையில் இருந்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளப்பெருக்கை கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறை அனுமதி தேவை
* குற்றியாறு – மோதிரமலை இடையே தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கும் பணிக்காக நேற்று மதியம் அங்கு நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் விரைந்தனர். தற்காலிக பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.
* தற்காலிக பாலம் அமைக்க உடனடியாக மண் தேவைப்படும் பட்சத்தில் வனத்துறை அனுமதி கிடைத்தால் மட்டுமே தற்காலிக பாலம் அமைக்க முடியும் என்பதால், வனத்துறை அனுமதிக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வனத்துறை அனுமதி கிடைத்தால் உடனடியாக மண் எடுக்க முடியும். தற்காலிக பாலம் பணியும் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் கூறினர்.
The post நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை; குமரி மலையோர கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு appeared first on Dinakaran.