×

கோயம்பேடு மார்க்கெட்டுகளில் போலீஸ் ரோந்து மேலும் தீவிரப்படுத்த வேண்டும்: காவல் நிலையத்தில் வியாபாரிகள் மனு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் நேற்றிரவு, கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 30க்கும் மேற்பட்டவர்கள் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது; கோயம்பேடு காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள் ஆகிய மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளியாட்கள் வந்து மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை கடைக்கு முன்பு வீசிவிட்டு செல்கின்றனர். காலையில் கடையை திறக்க வந்தால் கடையின் முன் மதுபாட்டில்கள் கிடக்கிறது. இரவு நேரங்களில் வெளியாட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

மார்க்கெட்டை பல வருடமாக பாதுகாத்துவரும் நிலையில் இரவு நேரங்களில் கும்பல், கும்பலாக மது அருந்தி வருகின்றனர். எனவே போலீசார்  ரோந்துவந்து மது அருந்தும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். தினமும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும்.இவ்வாறு புகாரில் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறியதாவது; கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் உள்ள பொது இடங்களில் மார்க்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் பலர் வாகனங்களில் அதிகமாக வருகின்றனர்.

இரவு 8 மணிக்கு மேல் உணவு தானியங்கள், மலர் அங்காடியில் மதுஅருந்திவிட்டு பாட்டில்களை வீசிவிட்டு செல்கிறார்கள். சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் வியாபாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே இரவு நேரங்களில் தினமும் காய்கறி, கனி, மலர், உணவுதானிய அங்காடி வளாகத்தில் போலீசார்  ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும். இவ்வாறு கூறினார். இதுசம்பந்தமாக போலீசார் கூறும்போது, ‘’கோயம்பேடு காய், கனி, மலர், உணவுதானியங்கள் மார்க்கெட்டில் தினமும் இரவு நேரங்களில் வெளியாட்கள் உள்ளார்கள என சோதனை செய்துவருகிறோம்.

சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தால் கூலி வேலை செய்வதாகும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் என்று கூறுகின்றனர். மார்க்கெட்டில் பல்லாயிரம் தொழிலாளர்கள் இருப்பதால் வெளியாட்கள் மார்க்கெட்டில் உள்ளே வந்தால் எங்களுக்கு அடையாளம் தெரிவதில்லை. எனவே வியாபாரிகள் சங்கத்தினர், கூலி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினால் வெளியாட்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். வியாபாரிகளின் கோரிக்கையடுத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு போலீசார் துணை நிற்போம்’ என்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டுகளில் போலீஸ் ரோந்து மேலும் தீவிரப்படுத்த வேண்டும்: காவல் நிலையத்தில் வியாபாரிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Coimbadu Markets ,Annagar ,Coimbed Police Station ,Chennai, ,Coimbadu Market ,Coimbed Markets ,Dinakaran ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...