×

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி மாஜி முதல்வரிடம் தீவிர விசாரணை: 3வது நாளாக சிபிஐ கிடுக்கிப்பிடி கேள்வி, செல்போன் அழைப்பு விவரம் தர உத்தரவு

கொல்கத்தா: கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ 3வது நாளாக துருவித் துருவி விசாரணை நடத்தியது. சம்பவம் நடந்த அன்றைய தினத்தின் செல்போன் அழைப்பு விவரங்களை சமர்ப்பிக்க சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது பலியான பெண் டாக்டரின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. இந்நிலையில், சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று தொடர்ந்து 3வது நாளாக துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

சால்ட்லேக்கில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு சந்தீப் கோஷ் வந்தார். அவரிடம், பெண் டாக்டரின் மரணம் பற்றி தகவல் கிடைத்ததும், அவர் யாரை முதலில் தொடர்பு கொண்டார், பெண் டாக்டரின் பெற்றோரை ஏன் 3 மணி நேரம் காக்க வைத்தார், சடலம் கண்டறியப்பட்டதும் மருத்துவமனையின் எமர்ஜென்சி கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு அறை அருகே உள்ள அறைகளை சீரமைக்க உத்தரவிட்டது ஏன்? என சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஏதேனும் சதி நடந்துள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மேலும், சம்பவத்தன்று சந்தீப் கோஷ் யார் யாருடன் செல்போனில் பேசினார், அவருக்கு வந்த செல்போன் தகவல்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தருமாறு சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தகவல்களை செல்போன் நிறுவனத்திடம் கேட்டு பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, இரவுப்பணியில் இருந்த டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் வாக்குமூலத்துடன் சந்தீப் கோஷ் வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கவும் சிபிஐ தீர்மானித்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை கொல்கத்தா காவல்துறையின் 2 அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது. பெண் பயிற்சி டாக்டர் கொலையைத் தொடர்ந்து சந்தீப் கோஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நீதி கேட்டு போராடுபவர்களை மம்தா அரசு ஒடுக்கி மிரட்டுவதாக கொலையான பெண் டாக்டரின் தந்தை நேற்று குற்றம்சாட்டி உள்ளார்.

* திரிணாமுல் எம்பிக்கு போலீஸ் சம்மன்
பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாக கொல்கத்தா போலீசார் முதலில் கூறியது குறித்து கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மற்றும் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ராய் நேற்று வலியுறுத்தினார். அப்போது அவர் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்பட்டதாக சுகேந்து கூறியிருந்தார்.

இது தவறான தகவல் என்றும், இதற்காக விளக்கம் கேட்டு சுகேந்து ராய் கருத்து தெரிவித்த சில மணி நேரத்திலேயே அவருக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பினர். அதோடு, போலீஸ் தரப்பில் தற்கொலை என சம்மந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் யாரும் கூறவில்லை என கமிஷனர் வினீத் மறுத்துள்ளார். முன்னதாக, கொல்லப்பட்ட பெண் பயிற்சி டாக்டர் குறித்து வதந்திகளை பரப்பியதாக பாஜ முன்னாள் எம்பி லாக்கெட் சட்டர்ஜி, 2 பிரபல டாக்டர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

* நீதி வழங்குவதில் தாமதம் எம்பி ஹர்பஜன்சிங் கடிதம்
முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஹர்பஜன் சிங், மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், ‘‘நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டரின் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை விவகாரத்தில் நீதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் மேற்கு வங்க முதல்வரும், மேற்கு வங்க ஆளுநரும் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தகிறேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முழு வலிமையை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கான தண்டனை முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் நீதி அமைப்பின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். இதுபோன்ற சோகம் நிகழாமல் இருப்பதை உறுதி செய்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்’’ என கூறி உள்ளார்.

* கால்பந்து போட்டி ரத்து போராட்டத்தால் பதற்றம்
கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று நடக்க இருந்தது. அப்போது அங்கு திரண்ட கால்பந்து ரசிகர்கள் பலரும் பெண் பயிற்சி டாக்டர் மரணத்திற்கு நீதி கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மைதானத்தின் வெளியே பெருமளவில் கூடிய ரசிகர்கள் அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு ரசிகர்களை கலைக்க தடி அடி நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

 

The post கொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி மாஜி முதல்வரிடம் தீவிர விசாரணை: 3வது நாளாக சிபிஐ கிடுக்கிப்பிடி கேள்வி, செல்போன் அழைப்பு விவரம் தர உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kolkata ,CBI ,Sandeep Ghosh ,Kolkata medical college ,Dinakaran ,
× RELATED கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு...