×

கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 கோடியே 75 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம், நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், முத்துகுமரப்பா தெருவில் 13 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

* பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் திறந்து வைத்தல்

கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜி.கே.எம். காலனி 12-வது தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ் 2 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாம் தளம், என மொத்தம் 4 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம்;

மதுரை சாமி மடத்தில் 26 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், கழிவறைகள். பொருட்கள் வைக்கும் அறை உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட உடற்பயிற்சிக்கூடம்; நேர்மை நகர் மயான பூமியில் 26 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீத்தார் நினைவு மண்டபம் என மொத்தம் 4 கோடியே 75 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

முன்னதாக கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு புத்தகப் பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

* சமுதாய நலக்கூடம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல்

கொளத்தூர், முத்துகுமரப்பா தெருவில் 13 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 40,300 சதுர அடி பரப்பளவில் உணவு அருந்தும் இடம், திருமண நிகழ்வு கூடம். ஓய்வறை, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் மூன்று தளங்கள் கொண்ட சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்டப்படவுள்ள இடத்தினை பார்வையிடுதல் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான 0.74 ஏக்கர் இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் வணிக வளாகங்கள் என 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கூடிய “மக்கள் சேவை மையம் (Citizen Service Centre)” கட்டப்படவுள்ள இடத்தினை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

* கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தல்

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொளத்தூர் பகுதிக்கான அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மூத்த முன்னோடி ஏகப்பன் உள்ளிட்ட 443 நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், கலாநிதி வீராசாமி, ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு. மகேஷ் குமார். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நீரேற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் பி. கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல் துணை ஆணையர் கே.ஜே. பிரவீன் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kolathur ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,Nitar Memorial Hall ,Dinakaran ,
× RELATED கொளத்தூர் பேரவைத் தொகுதியில்...