×

கொடைக்கானலில் பராமரிப்பின்றி உள்ள ரோஜா பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள ரோஜா பூங்கா பராமரிப்பின்றி இருப்பதால் அங்குள்ள பூக்கள் கருகி வருகின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆண்டின் அநேக மாதங்களிலும் வருகை தருவர்.

இங்குள்ள அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆயிரக்கணக்கான ரோஜா மலர் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50ம், சிறியவர்களுக்கு ரூ.25ம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இப்பூங்கா சில மாதங்களாக உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள பெரும்பாலான ரோஜா செடிகள் காய்ந்தும், பூக்கள் கருகியும் காணப்படுகின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் செடிகள் காய்ந்து கிடப்பதையும், மலர்கள் கருகி கிடப்பதையும் பார்த்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

பூங்கா பராமரிப்பின்றி இருக்கும் நிலையில் அதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தோட்டக்கலை துறையினர் இந்த பூங்காவை முறையாக சீரமைத்து, அனைத்து நாட்களிலும் பூக்கள் பூக்கும் வகையில் மலர் செடிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

The post கொடைக்கானலில் பராமரிப்பின்றி உள்ள ரோஜா பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Princess of the ,Mountains ,Dinakaran ,
× RELATED தாமதமாக துவங்கினாலும் தாக்கம்...