×
Saravana Stores

கேரளாவில் பரவும் குழந்தைகளை தாக்கும் மூளை தின்னும் அமீபா தொற்று: தேவையற்ற பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: அமீபிக் மெனிங்கோ எனப்படும் மூளையை பாதிக்கும் அமீபா தொற்று கேரளாவில் பரவி வருகிறது. கொரோனா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், மர்மக் காய்ச்சல் என ஒவ்வொரு காலக்கட்டத்தில் எதேனும் ஒரு நோய்த்தொற்று பரவி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திவிடும். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பது தான் அமீபிக் மெனிங்கோ எனப்படும் மூளை திசுக்களை பாதிக்கும் நோய்த்தொற்று சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த நோய்த்தொற்றினால் மூன்று சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மக்களிடையே இந்த நோய் குறித்த பீதி அதிகரித்துள்ளது. பொதுவாக தேங்கியிருக்கும் தண்ணீர், மாசுப்பட்ட குளம், ஏரி, கிணறு , நீச்சல்குளம், போன்றவற்றில் குளிக்கும் போது அதில் உள்ள ஒருவகையான அமீபா மூக்கு வழியாக உள்ளே மூளைக்கு சென்றுவிடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் திசுக்களை தின்று மூளை வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதீத தலைவலி, தொடர் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஆரம்ப அறிகுறிகள் ஆகும். இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படுக்கூடும். அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், விரைந்து கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த நோய் தொற்று கேரளாவில் உறுதியான உடனே, தமிழ்நாட்டில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாசுப்பட்ட நீர்நிலைகளில், முறையாக பராமரிக்காத நீச்சல் குளத்தில் குளிப்பதை பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் குழந்தைகளிடம் இதுகுறித்த விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் கூறுகிறார். தமிழ்நாட்டில் இதுவரை அமீபிக் மெனிங்கோ நோய்த்தொற்று ஏற்படவில்லை. குறிப்பாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த நோய் பரவாது என்பதால் மக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் எனவும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

The post கேரளாவில் பரவும் குழந்தைகளை தாக்கும் மூளை தின்னும் அமீபா தொற்று: தேவையற்ற பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Brain-eating amoeba outbreak in ,Tamil ,Nadu health department ,CHENNAI ,Kerala ,Tamil Nadu health department ,
× RELATED உன்னதத் தமிழில் உபதேசம்