×

கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று, கேரள வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால், அனைத்து வகையான வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரத்தில் புதன் மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் தூத்துக்குடி,திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வாழைத்தார் கொண்டு வரப்பட்டு, அவை தரத்திற்கேற்றார் போல் குறிப்பிட்ட விலைக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் வரை மழையின்றி வெயிலின் தாக்கத்தால் சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகள் வாடி வதங்கியதுடன் அதன் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுவட்டார கிராமப்பகுதி மட்டுமின்றி, திருச்சி மற்றும் தூத்துக்குடி பகுதியிலிருந்தும் வழைத்தார் வரத்து குறைவாக காணப்பட்டதுடன், வாழைத்தார்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

ஆனால், கடந்த மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து அவ்வப்போது அவ்வபோது கோடை மழையால், நல்ல விளைச்சலடைந்த வாழைத்தார்களின் அறுவடை கடந்த சிலநாட்களாக அதிகரித்துள்ளது. இதனால், நேற்று நடந்த சந்தை நாளின் போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தது.கேரள மாநில பகுதியில் தற்போது தொடர்ந்து சுபமூகூர்த்த நாட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், நேற்றைய சந்தைக்கு கேரள வியாபாரிகள் அதிகம் வந்து, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து அதிகளவு வாங்கி சென்றனர். இதனால், அனைத்து ரக வாழைத்தார்களும் தொடர்ந்து கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டது. இதில், செவ்வாழைத்தார் ஒரு கிலோ ரூ.52 வரையிலும், பூவந்தார் ரூ.750 வரையிலும், சாம்ராணி ரூ.540க்கும், மோரீஸ் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.43க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.45க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனையானது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Pollachi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகம்