×

பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகம்

*கேரள வியாபாரிகள் வருகை; ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து அதிகமாக இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், கூடுதல் விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில், செவ்வாய், வியாழக்கிழமைகளில் நடக்கும் மாட்டு சந்தை நாளின்போது, வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாடுகளை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். கடந்த மாதத்தில் சில வாரமாக சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததுடன், விற்பனையும் சுறுசுறுப்புடன் இருந்தது. அதிலும் இந்த மாதம் துவக்கத்தில் மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததுடன், விற்பனை விறுவிறுப்புடன் இருந்தது.

அதன்பின் இரண்டு வாரமாக கோடை மழை பரவலாக பெய்ததால், சந்தை நாளின்போது வெளியூர் மாடுகள் வரத்து குறைவானது. தற்போது மழை குறைவால், நேற்று நடந்த சந்தை நாளின்போது, வெளியூர் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. அதிலும் ஆந்திர மாநில மாடுகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. நேற்று ஒரேநாளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன இருப்பினும், கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், பெரும்பாலானோர் கூடுதல் விலைக்கு வாங்கிட்சென்றனர்.

இதில் ஆந்திரா காளை மாடு ரூ.55 ஆயிரம் வரையிலும், நாட்டு காளை மாடு ரூ.40 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.36 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.40 ஆயிரம் வரையிலும், கன்று குட்டிகள் ரூ.17 ஆயிரம் வரை என, கூடுதல் விலைக்கு விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகம் appeared first on Dinakaran.

Tags : Pollachi market ,Kerala ,Pollachi ,
× RELATED கேரளாவிலிருந்து பொள்ளாச்சி...