×

கீழடி ஆய்வு அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொல்லியல் துறை ஆய்வு நடைபெற்றது. அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோடு 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றிய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார். ஆனால் இந்த அறிக்கை தற்போது வரை பொதுவெளியில் வௌியிடப்படவில்லை. மேலும் அகழாய்வின் போது கண்டறியப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஒன்றிய கலாச்சார அமைச்சகம் இந்த செய்தியை மறுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “ஒரு அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெறும் அறிக்கைகள் வெவ்வேறு நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அவை சரி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பின்னர் அவர்களிடமிருந்து கிடைக்க பெறக்கூடிய அறிக்கைகள் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் வெளியிடப்படுகின்றது. இதே நடைமுறை கீழடி அகழாய்வு அறிக்கையிலும் பின்பற்றப்பட்டது. நிபுணர்களின் ஆய்வுக்காக மட்டுமே அறிக்கை அனுப்பப்பட்டது. இது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதுவரை கீழடி அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கவில்லை.

மேலும் கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதாக பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது. மேலும் கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை. இது இந்திய தொல்லியல் துறையை மோசமான வகையில் சித்தரிக்கக் கூடிய நோக்கத்தை கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கீழடி ஆய்வு அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union government ,New Delhi ,Keezhadi, Sivaganga district ,Amarnath Ramakrishnan ,Keezhadi ,Dinakaran ,
× RELATED 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த...