திருவொற்றியூர்: காசிமேடு பகுதியில் மீன் பிடித்தபோது நாகப்பட்டினத்தை சேர்ந்த 90 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 90 மீனவர்கள் 8 விசைப்படகுகளில், கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கடலில் சீற்றம் அதிகம் காணப்பட்டது. மேலும் நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காசிமேடு பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த காசிமேடு மீனவர்கள், 90 பேரையும் கரைக்கு அழைத்து வந்து அவர்களிடம் இருந்த 8 ஜிபிஎஸ் கருவிகளை பறிமுதல் செய்து, மீன்பிடி உதவி இயக்குனர் அஜய் ஆனந்த்திடம் இதுகுறித்து தகவல் கூறினர்.
அதன்பேரில் நாகப்பட்டினம் மீனவ சங்க தலைவருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வரவைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் இனி காசிமேடு பகுதிக்கு மீன் பிடிக்க வரமாட்டோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு 8 ஜிபிஎஸ் கருவிகளையும் மீண்டும் பெற்றுக்கொண்டனர். மேலும் கடலில் சீற்றத்தின் அளவு குறையாததால் 2 நாள் இங்கேயே தங்கிவிட்டுச் செல்வதாக நாகப்பட்டினம் மீனவர்கள் கூறினர். அதற்கு காசிமேடு மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.
The post காசிமேடு அருகே மீன் பிடித்தபோது நாகப்பட்டினத்தை சேர்ந்த 90 மீனவர்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.