×

நேற்று கர்நாடகா.. இன்று கேரளா… நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்து தென் மாநிலங்கள் கொந்தளிப்பு!!

டெல்லி :ஒன்றிய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வரிப் பகிர்வு விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அநீதி இழைப்பதாக கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகியவை குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு உரிய நிதியுதவி வழங்கவும், வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கேரளா கடன் வாங்குவதில் உச்சவரம்பு விதிப்பதற்கு எதிராகவும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. கேரள அரசு போராட்டத்திற்கு தமிழ்நாடு, டெல்லி மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பதாகைகள் ஏந்தியபடி ஒன்றிய அரசு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துவதை உறுதி செய்வதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்.பிப்ரவரி 8ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு சிவப்பு எழுத்து தினமாக இருக்கும், “இவ்வாறு தெரிவித்தார்.

The post நேற்று கர்நாடகா.. இன்று கேரளா… நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்து தென் மாநிலங்கள் கொந்தளிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kerala ,Southern ,Union government ,Delhi ,Chief Minister ,Pinarayi Vijayan ,Union BJP government ,Tamil Nadu ,Union Budget ,
× RELATED கேரள, கர்நாடகாவுக்கு நாளை ரெட் அலர்ட்!!