×

துணி வியாபாரம் செய்துகொண்டே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கர்நாடக ஆசாமிகள் 2 பேர் கைது

துரைப்பாக்கம்: சென்னை எண்ணூர் நெடுஞ்சாலையில், ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் பூசை துரை, உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். பின்னர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் பேட்டரி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ரபிக் பாஷா (40) மற்றும் சாபி (30) என்பது தெரிய வந்தது.

இருவரும் சென்னையில் துணி விற்பனை செய்வதற்காக ரயில் மூலம் பெங்களூருவில் இருந்து சென்ட்ரலுக்கு வந்து பெரியமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். சொகுசு வாழ்க்கை வாழ பணம் தேவைப்பட்டதால் இருவரும் திருட முடிவு செய்துள்ளனர். அதன்பேரில், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் ஒரு பைக்கை திருடி நம்பர் பிளேட்டை மாற்றி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை பைக்கில் சென்று நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை தெருவில் உள்ள தனியார் ஏடிஎம்மின் உள்ளே சென்று ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 யுபிஎஸ் பேட்டரிகளை திருடி வந்துள்ளனர்.

இவர்கள் துணி வியாபாரம் செய்ததுபோக மற்ற நேரங்களில் இதுபோன்ற கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மதிய நேரத்தை தேர்ந்தெடுத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மதிய நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். கடைகளில் இருப்பவர்கள் உணவு அருந்தச் செல்வார்கள் போன்ற காரணங்களால் மதிய நேரத்தை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு பைக், 2 பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்கே நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

The post துணி வியாபாரம் செய்துகொண்டே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கர்நாடக ஆசாமிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,RK Nagar ,Poosai Durai ,Mariappan ,Dinakaran ,
× RELATED கோவையில் போக்குவரத்து விதியை...