×

கர்ம தோஷத்தை மிகைப்படுத்தும் சனி-ராகு இணைவு

சனி – ராகு: கிரகங்களின் சேர்க்கையில் இதுவும் மாறுபட்ட அமைப்பாகும். என்னவென்றால், காலபுருஷனுக்கு பத்தாம் மற்றும் பதினொன்றாம் பாவத்திற்குரிய கிரகமான சனியுடன் ராகு இணையும் அமைப்பு. ஜோதிடத்தில் தொழில், ஆயுள் காரகனாக சனி பகவானே வர்ணிக்கப் படுகிறார். சனி இருள்கொண்ட குளிர்ச்சி யான கிரகம். ராகுவானது இருள் கொண்ட எதிர் தன்மையுடைய சாயா கிரகம். ராகுவானது ஒரு மனிதனின் கர்மத்தை சேகரிக்கும் கிரகம். இந்த கிரகத்தையே முன்னோர்கள் என்று குறிக்கப்படுகிறது. சனியானது இருக்கின்ற கர்மத்தின் அளவின்படி அதை அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்கும் கிரகம். அப்படிப்பட்ட இரண்டு கிரகங்கள் இணைவு என்பது மிகுந்த கர்மத்தை குறிக்கும் அமைப்பாகும். எந்த பாவத்தில் இந்த கிரகங்கள் இணைகிறதோ அந்த பாவம் தொடர்பான கர்மம் அதிகம் உண்டு. ஆய்வு செய்தால் மட்டுமே தெரியும். சனி – ராகு இணைவு: சனிக்கு மூன்றாமிடம் (3ம்), ஏழாமிடம் (7ம்), பத்தாமிடம் (10ம்) ஆகியவற்றில் ராகு இருந்தாலும், சனிக்கு திரிகோண ஸ்தானங்கள் எனச் சொல்லக்கூடிய இடத்தில் ராகு இருந்தாலும் அவை இணைவை குறிக்கும். அதே போல, ராகுவிற்கு இடஞ்சுழியாக மூன்றாம் இடத்தில் (3ம்) சனி இருந்தாலும் ஏழாம் இடத்தில் (7ம்) சனி இருந்தாலும் பதினொன்றாம் இடத்தில் (11ம்) சனி இருந்தாலும் இரண்டு கிரகங்களும் இணைவாக கொள்ளலாம்.

பலன்கள்

*ஜாதகருக்கு சனி – ராகு இணைவு எந்த பாவகத்தில் வருகிறதோ உடலில் அந்த பாவகத்தில் தழும்புகள் அல்லது கருமையான புள்ளிகள் இருக்கும். லக்னத்தில் இருந்தால் தலையில் காயத் தழும்புகள் இருக்கும். ஜாதகரும் நீண்ட சுருண்ட கேசங்களுடன் இருப்பார். மூன்றாம் பாவத்தில் (3ம்) சனி – ராகு இணைவு இருக்கும் ஜாதகருக்கு அதீத அசட்டு தைரியம் உண்டு. மேலும், சில முயற்சிகள் தடைபடும் வாய்ப்புகள் அதிகம்.

*நான்காம் பாவத்தில் (4ம்) சனி – ராகு இணைவு இருக்கும் ஜாதகருக்கு வாகன விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம். ஜாதகருக்கும், வாகனத்தில் பயணிப்பதற்கு அச்சம் உண்டாகும். வாகனங்கள் தொலைந்து போக வாய்ப்புகள் அதிகம். ஜாதகர் பழைய விஷயங்களை விரும்பும் நபராக இருப்பார். இவருக்கு அமையும் வாகனங்கள் / வீடுகள் அமைப்புகள் வித்தியாசமாக இருக்கும். ஓசியில் வாகனம் அமையும் வாய்ப்பிருக்கும். வீடுகள் ஊரின் ஒதுக்குப்புறமாகவோ அல்லது பழைய பங்களா போன்ற வீடு அமையும். இரவலாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். இரவலாக வாங்கும் பொருட்கள் தொலைந்து போகும் வாய்ப்பிருக்கிறது.

*10-ல் சனி – ராகு தொடர்பிருந்தால் தொழில் கில்லாடி. இவர்களை போல ஒரு தொழில் செய்ய இயலாது என்பார்கள். தொழிலில் ராட்சசனை போல இருப்பர். ஏராளமான வேலைக்காரர்கள் இருப்பர். தொழில் விருத்தி எல்லாம் இருக்கும். ஆனால், தொழில் கொஞ்சம் முரண்பட்டு இருக்கும்.

*ஆறாம் பாவத்தில் (6ம்) சனி – ராகு தொடர்பு உண்டானால் நோய்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எதிரிகள் பயந்து ஓடுவார்கள். கடன் உண்டானால் நீளும். கடன் சிலருக்கு உண்டாகவே ஆகாது.

* ஏழாம் பாவத்தில் (7ம்) சனி – ராகு இணைவிருந்தால் ஜாதகன் பழைய பொருட்களை வைத்து வியாபாரம் செய்பவனாக இருப்பான். உதாரணத்திற்கு Antique என்று சொல்லக்கூடிய பழங்காலப் பொருட்களை விற்பவனாகவோ அல்லது வாங்குபவனாகவோ இருப்பார். சனி பழைய பொருட்களை குறிக்கும். இந்த ஜாதகருக்கு வருகின்ற கணவனோ அல்லது மனைவியோ நான்கு முதல் எட்டு வயது வித்தியாசம் இருக்கும்.

*இரண்டாம் பாவத்தில் (2ம்) சனி – ராகு இருப்பது பெரிய பற்களை உடையவராக இருப்பார். ஜாதகர் அதிகம் பேச மாட்டார். அவர் பேசினால் போச்சு மூன்றாம் உலகப் போரைவிட பெரியதாக இருக்கும். உண்மையை தவிர எல்லாவற்றையும் பேசும் இயல்புடையவராக இருப்பார். கல்வியில் தடை ஏற்படுத்தும். உணவை அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். முக்கியமாக அசைவத்தை விரும்பி உண்ணும் பழக்கம் உடையவராக இருப்பார்.

*ஐந்தாம் பாவத்தில் (5ம்) சனி – ராகு அமைப்பானது புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அப்படியே புத்திரன் பிறந்தால் அந்த குழந்தை மிகவும் சுட்டியாக இருக்கும். சேட்டைகளில் வீடுகளில் உள்ள பொருட்களை உடைப்பான்.

*எட்டாம் பாவத்தில் (8ம்) சனி – ராகு இணைவு இருந்தால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும், சட்டத்திற்கு புறம்பான செயல்கள் மற்றும் சட்த்திற்கு புறம்பான பணப் பரிவர்த்தனை கூடவே கூடாது.
*பதினோராம் பாவத்தில் (11ம்) சனி – ராகு இருப்பது சிறப்பான அமைப்பாக இருந்தாலும். சிந்தனைகள் சிறப்பாக இருக்காது. நற்சிந்தனைகள் தேவை.

*பன்னிரண்டாம் பாவத்தில் (12ம்) சனி – ராகு இருப்பது நன்மையும் தீமையும் கலந்த அமைப்பாகும். வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு. இவருக்கும் தூக்கம் இன்மை அடிக்கடி உண்டாகும். அதனால் உடற்சோர்வு ஏற்படும்.

சனி – ராகு இணைவிற்கான பரிகாரம்

*சனிக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து கொள்வதால் இடர்ப்பாடுகள் நீங்கும்.
*தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறந்த பயனளிக்கும். இந்த தேய்பிறை காலத்தில் வழிபடுவதால் உங்கள் பிரச்னைகள் தேய்ந்து நன்மைகள் உண்டாகும்.
*சனிக்கிழமை அசைவம் இல்லாமல் இருப்பது சிறப்பை தரும். நவகிரகங்களில் சனி பகவான் கர்மத்தின் அளவினை கணக்கெடுப்பவனாக உள்ளார். காலத்தின் அடிப்படையில் தண்டனைகளை வழங்குவதில் வல்லவன். காலத்தின் கடவுளாக இருப்பவர் காலபைரவன். சனி பகவானின் குருநாதராக காலபைரவர் உள்ளார். காலபைரவர் வழிபாடு சனிபகவானின் இன்னல்களில் இருந்து வெளியேற்ற உதவும்.
*ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல் நன்மை தரும். குறிப்பாக ஊனமுற்ற அந்நியர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். தன்னால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு சனி பகவான் கருணை காட்டுவான்.
*சனிக்கிழமை தோறும் உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்யுங்கள். பிரச்னைகள் விலகிப்போகும்.

 

The post கர்ம தோஷத்தை மிகைப்படுத்தும் சனி-ராகு இணைவு appeared first on Dinakaran.

Tags : Saturn ,Calabrushan ,Lord ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணாவின்...