×

தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டம்

சென்னை :தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய விவகாரத்தில் முன்ஜாமின் கோரிய நடிகை கஸ்தூரியின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், “தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களிடையே வன்முறை எழும்போது வெடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கும். கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறிக் கொள்ளும் கஸ்தூரியின் வாயிலிருந்து வந்துள்ள வார்த்தைகள் இழிவானவை. கஸ்தூரியின் பேச்சு தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமாக சித்தரித்துள்ளது.

பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ, சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. நடிகை கஸ்தூரி பேச்சு வெறுப்பு பேச்சாகவே உள்ளது. மனுதாரரின் ட்வீட் மூலம் மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை. தனது பேச்சுகளை நியாயப்படுத்தவே கஸ்தூரி முயற்சித்துள்ளார். கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிடும்போது நீதிமன்றம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டியது அவசியம். நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்ளாவிட்டால் மோசமான முன்மாதிரி ஆகிவிடும். கேவலமான கருத்து கூறுவோர் மீது வழக்கு தொடரப்பட்டால் அதில் இருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது.

இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு மன்னிப்பு கோரும் நிலை ஏற்பட்டுவிடும். கஸ்தூரி பேச்சு வில்லில் இருந்து வெளியேறிய அம்பு போன்றது. இலக்கை அம்பு அடைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது. அரை மனதுடன் கோரப்படும் மன்னிப்பு ஏற்கெனவே ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து விடாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Kasturi ,Judge ,Anand Venkatesh Kadam ,Chennai ,Anand Venkatesh ,Munjam ,Actress ,Musk ,
× RELATED பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நடிகை...