×

கூட்டு கொள்ளை, கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 4 பேர் கைது நாட்டு வெடிகுண்டு, கத்தி பறிமுதல்

*மேலும் 3 பேருக்கு வலை

புதுச்சேரி : வில்லியனூர் அருகே கூடப்பாக்கம், கேனேரிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேலய்யன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோனேரிக்குப்பம் சுடுகாடு அருகே சென்றபோது போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன் ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளது. உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தபோது, 3 நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட 4 நபர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது நாட்டு வெடிகுண்டு, கத்தி, மிளகாய்பொடி ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் கூடப்பாக்கம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த தேவநாதன் (18), கமலேஷ் (19), அகரம் பகுதியை சேர்ந்த ராமு (19), தீனா (19), கவுதம் (18), கார்த்திகேயன் (19) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் ராமு, தீனா, கவுதம் ஆகியோர் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவரும் அப்பகுதியில் நள்ளிரவில் கூட்டுக்கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்ததாகவும், தேவநாதனுக்கும், கோனேரிக்குப்பம் உலகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததால் உலகநாதனை கொலைசெய்ய சதிதிட்டம் போட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து கத்தி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

The post கூட்டு கொள்ளை, கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 4 பேர் கைது நாட்டு வெடிகுண்டு, கத்தி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Koodapakkam ,Willianur, Kanerikuppam ,Willianur ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்