சென்னை: நகை கடன் வழங்க ரிசர்வ் வங்கியின் விதித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகளால் பலர் நகை கடன் பெற முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் குறைந்த வட்டிக்கு தங்க நகைகளை அடகு வைத்து அவசரகால நிதி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்க நகை கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் பேரிடியாக அமைந்துள்ளன. இதுவரை நகையின் மதிப்பில் இருந்து 80% வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் படி நகையின் மதிப்பில் 75% தொகையை மட்டுமே கடனாக பெற முடியும்.
இதனால் கடன் பெறுபவர்களுக்கு குறைவான தொகையே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கியில் அடமானம் வைக்கும் நகைகளுக்கே தான் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்குபவர்கள் வழங்க வேண்டும் என்ற விதியால் பெரும்பாலான மக்கள் நகை கடன் பெற முடியாத சூழல் உருவாகும். இந்திய குடும்பங்களில் தங்க நகைகள், குடும்ப சொத்துக்களாக தலைமுறைகள் கடந்தும் பயன்பாட்டில் உள்ளதால் ஆவணங்களை வழங்குவது சாத்தியமற்றதாக கருதப்படுகிறது. தங்க நகையின் தரம், தூய்மை குறித்து கடன் பெறுபவர்களுக்கு வங்கி சான்று வழங்க வேண்டும் என்ற விதியால் கடனாளி உடனே கடன் பெற முடியாது.
அதேபோல 22 காரட் தங்கத்தின் அடிப்படையில் 18 காரட் நகை மதிப்பீடு செய்யப்படும் என்ற புதிய விதியால் 18 காரட் தங்க நகைகளை அடமானம் வைப்பவர்களுக்கு கடன் தொகை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடனை முழுமையாக செலுத்திய அன்றைக்கே அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடனை செலுத்திய 7 வேலை நாட்களுக்குள் நகைகளை திருப்பி தரவேண்டும் என்ற புதிய விதியால் மக்கள் அலைக்கழிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
கடன் பெற்ற அதே கிளையில் நகைகள் வைக்கப்படும் நிலையில், நகைகள் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விதியால் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பில் சில அம்சங்கள் எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி தனது புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
The post நகை கடன்.. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?: மக்கள் கடும் எதிர்ப்பு!! appeared first on Dinakaran.
