×

ஜெயதேவர்

பக்த விஜயம் பகுதி – 1

ஜகந்நாதம்! பகவானின் சாந்நித்தியம் நிறைந்த திருத்தலம். அதன் அருகில் ‘பில்வகாம்’ எனும் ஊரில் நாராயண சாஸ்திரி என்பவர் இருந்தார். (ஜகந்நாதத்தில் இருந்து 56 கி.மீ. உள்ள இந்த ஊர் தற்போது ‘கெந்துலிசாசன்’ (KENDULI SASAN) என்று அழைக்கப்படுகிறது) இவர் குணங்களைப்பற்றி பக்த விஜயம் சொல்லும் தகவல்கள்…

இவர் நெற்றியில் திருநாமம் அணிவார்; பந்த பாசங்களில் குறைந்தவர்; மந்த புத்தி இல்லாதவர்; பொறி-புலன்களை வசப்படுத்தியவர்; யாரிடமும் பகை கொள்ளாதவர்; புகழ்ச்சிக்கு வசப்படாதவர்; சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர்; கண்ணனிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர்; நான் என்ற எண்ணமே இல்லாதவர்; பிரம்மத்தில் ஆழ்ந்தவர்; மனத்தில் ஆனந்தம் கொண்டவர்; அந்தணர்; எந்நேரமும் கல்லும் உருகும்படியாக நாராயணன் திருநாமங்களைப் பாராயணம் செய்பவர், நாராயண சாஸ்திரி.

அப்படிப்பட்ட அவருக்குக்கமலாபாய் என்னும் உத்தமி மனைவியாக இருந்தாள். உத்தமமான அந்தத் தம்பதிகள் செய்துவந்த அன்றாட அலுவல்களையும், மூலநூல் விவரிக்கிறது. அறம் தவறாமல் அன்போடு அதிதிகளுக்கு (எதிர்பாராமல் வருபவர்) விருந்து இடுவது, தங்கள் அன்றாடக் கடமைகளைத் தவறாமல் செய்வது; சாதுக்களின் தொடர்பு; கதாகாலட்சேபம் சொல்வது; பகவான் நாம ஜபம் செய்வது; தவம் செய்வது; வேதப்பயிற்சி; இல்லையென்று வருபவர்களுக்குத் தானம் செய்வது; என்ன வந்தாலும் கோபப்படாமல் நிதானமாக இருப்பது; பகவானிடம் முழுமையாகத் தங்களை ஒப்படைப்பது; விருப்பு-வெறுப்பு இல்லாமல் இருப்பது, எனும் நற்குணங் களோடு வாழ்ந்து வந்தார்கள்.

நாளாகநாளாகக் கமலாபாய்க்கு ஒரு மனக்குறை தோன்றத் தொடங்கியது. நாள்தோறும், தான் பூஜை செய்யும் பகவானிடம் தன் குறையைச் சொல்லி முறையிடத் தொடங்கினாள்.

‘‘பகவானே! குழந்தை இல்லாமல் வருந்தும் என் குறை தீர, சாந்தமே வடிவான ஒரு பிள்ளையை நான் பெறும்படியான வரத்தைத் தந்தருள வேண்டும்’’ என உள்ளம் உருகி வேண்டினாள். அவள் பிரார்த்திப்பது, அவள் கணவரான நாராயண சாஸ்திரிக்குத் தெரியாது.

ஒரு நாள், நாராயண சாஸ்திரியின் கனவில் காட்சியளித்த பகவான், ‘‘உத்தமபக்தனே! நீயும் உன் மனைவியும் செய்யும் தவம் எனக்கு ஆனந்தத்தை உண்டாக்குகிறது. உன் மனைவி வேண்டிய வரத்தைத் தந்தேன். இதனால் உன் குறையும், உன் முன்னோர்களின் குறையும் தீரும்’’ என்று சொல்லி மறைந்தார். உடனே சாஸ்திரி கனவு கலைந்து எழுந்தார். மனைவியை எழுப்பினார்; அவளிடம், ‘‘அம்மா! பகவான் என் கனவில் வந்தார். ‘உன் மனைவி விரும்பிய வரத்தைத் தந்தேன். அதனால் உன் குறையும் உன் முன்னோர்களின் குறையும் தீரும்’ என்று சொல்லிப் போனார். பகவானிடம் நீ என்ன வரம் கேட்டாய்? அதைச் சொல் இப்போதே!’’ என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார்.

‘‘சுவாமி! வேதம் விதித்தபடி, நம் குறை தீர முக்தியளிக்கும் ஒரு பிள்ளையைப் பெறும் வரத்தையே கேட்டேன்’’ என்றாள் கமலாபாய். அதைக் கேட்ட சாஸ்திரி மிகவும் வருந்தினார். ‘‘பேதைமை நிறைந்தவளே! என்ன கேட்டாய் நீ? பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வைத்து, முக்தியைத் தரும் பகவானிடம் நீ முக்தியைக் கேட்கக்கூடாதா? உன் பழைய வினைகள் எல்லாம் தீர்ந்து போகாதா?

‘‘அதை விட்டுவிட்டு, இப்படிப் பிள்ளை வேண்டும் எனக் கேட்டிருக்கிறாயே! நீ என்ன ஒன்றும் தெரியாதவளா? மலையைத் தோண்டி, எலியைப் பிடித்ததைப் போலச் செய்து விட்டாயே! இவ்வளவு காலம் படாதபாடு பட்டுச் சேமித்து வைத்த ஞானச் செல்வத்தை, அஞ்ஞானத்தால் இழந்து விட்டாயே!’’ என்றெல்லாம் புலம்பிய சாஸ்திரி, மனம் வாடி, பகவானைப் பாடி, வெகு நேரம் நிஷ்டையில் இருந்தார். அதன் பிறகும் அவர், மனைவியிடம் பேசாமல் இருந்தார். கமலாபாய் வருந்தினாள்; ‘‘விவரம் தெரியாமல் தவறு செய்து விட்டோமே! பகவானே! ஜனார்தனா! எங்கள் மூவேழ் இருபத்தோரு தலைமுறையும் முக்தி அடையும் வண்ணம் அருள்புரிவாய்!’’ என வேண்டி அழுதாள்.

கணவன் – மனைவி இருவரும் அன்று முழுவதும் உண்ணவே இல்லை. பகல் போய் இரவு வந்தது. இருவருமாகத் தூக்கம் வராமல் வருத்தத்தில் இருந்தார்கள். அப்போது பகவான் வேதியர் வடிவில் வந்து, ‘‘பக்தியில் சிறந்த உத்தமர்களே! புத்திர பாக்கியத்தால் உங்கள் முன்னோர்களுக்கு முக்தியும், விரக்தியால், உங்களுக்கு என் பக்தியும் அளித்தேன். இனி நீங்கள் இருவரும் நீராடி உணவு உண்டு, ஒற்றுமையாக இருங்கள்!’’ என்று சொல்லி மறைந்தார்.

அதைக் கேட்ட நாராயண சாஸ்திரி, தனக்கிருந்த கோப – தாபத்தையெல்லாம் விட்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு, ‘‘அம்மா! உன்னால் என் குலத்தவர்களும் நானும் புண்ணியசாலிகளாக ஆனோம்’’ என்று பாராட்டினார். பகவான் சொன்னபடி நீராடி, உணவுண்டு ஒற்றுமையாக இருக்கத் தொடங்கினார்கள். காலம் கனிந்தது.கமலாபாய் கருவுற்றாள். தெய்வங்கள் பலவும் ஒன்று சேர்ந்து அவதரித்ததைப் போல, கமலாபாய்க்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. நாராயண சாஸ்திரியும், கமலாபாயும் மிகவும் மகிழ்ந்தார்கள். பகவானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, அனைவர்க்கும் விருந்து வைத்தார்கள். குழந்தைக்கு ‘ெஜயதேவன்’ எனப் பெயர் இட்டார்கள்.

ெஜயதேவருக்கு ஐந்து வயதானது. ஒரு நல்ல நாளில் பல மங்கல வாத்தியங்கள் முழங்க, வேதவல்லுனர்கள் சூழ, ஜெயதேவருக்கு உபநயனம் – பிரம்மோபதேசம் – பூணூல் அணிவிக்கும் மங்கல நிகழ்வைச் செய்தார்கள். ெஜயதேவருக்கு வித்தியாப்பியாசம் எனும் கல்வி கற்பிக்கும் நிகழ்வு தொடங்கியது. நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், புராண – இதிகாசங்கள் என அனைத்திலும், ெஜயதேவர் திறமைசாலியாக ஆனார். தகுந்த அனுபவசாலிகளிடம் பாடம்கேட்பதைப் போலக்கேட்டு, மேன்மேலும் ஞான அனுபவம் பெற்றார். இவ்வாறு ஞானத்தின் உச்சியை அடைந்த ெஜயதேவருக்குத் தகுந்த வயது வந்ததும்,உறவுக்காரர் பெண்ணான பத்மாவதி எனும் உத்தமியை ெஜயதேவருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்கள்.

பெரும் அளவில் நீள – நெடுகப் பந்தல் போட்டு, வாழை மரங்களை நட்டு, மலர்த் தோரணங்களும் மாவிலைத் தோரணங்களும் கட்டினார்கள். ஊரே மெச்சியது.
ஒரு குறிப்பிட்ட நாளில், வந்தவர்களுக்கு எல்லாம் சந்தனம் பூசி வரவேற்றார்கள். ெஜயதேவருக்கும் பத்மாவதிக்கும் மணக்கோல அலங்காரங்கள் செய்து, மலர்ப் பந்தலின் கீழே உட்கார வைத்தார்கள். நல்ல நேரத்தில் வேத ஒலிகளும் மங்கல வாத்தியங்களும் ஆசீர்வாதங்களும் முழங்க, அக்கினி சாட்சியாக ெஜயதேவர், பத்மாவதிக்குத் திருமாங்கல்யம் பூட்டினார். வந்திருந்தவர்கள் எல்லோரும் அட்சதை (முனை முறியாத அரிசி) தூவி வாழ்த்தினார்கள். அதன்பின் அனைவரும் கல்யாண விருந்து உண்டு, களிப்போடு தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.

ெஜயதேவரும் பத்மாவதியும் மிகுந்த ஒற்றுமையோடும் அன்போடும் இல்லறம் எனும் நல்லறத்தைத் தொடங்கினார்கள். அதிகாலையில் எழுவது, வேத நூல்களை ஓதுவது, பக்தியோடு பகவான் நாமங்களைச் சொல்வது, பெரியவர்கள் ஏவல் படி அவர்கள் சொன்னதைச் செய்வது, சொர்ணதான (தங்கம்) தானங்களும் அன்னதானங்களும் செய்வது, கெட்டவர்களிடம் இருந்து விலகி நிற்பது, நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பது என அனைவரும் புகழும் வகையில் ெஜயதேவரும் பத்மாவதியும் வாழ்ந்தார்கள்.

மகனும் மருமகளும் இல்லறம் எனும் நல்லறத்தை, அனைவரும் புகழும் படியாக நடத்தி வந்ததைக்கண்ட நாராயண சாஸ்திரியும் கமலாபாயும் மிகவும் மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்வோடு மகனை அழைத்து, ‘‘மகனே! நாங்கள் இருவரும் வனவாசம் போய்ப் பகவானை எண்ணித் தவம் செய்யத் தீர்மானித்து இருக்கிறோம். நீ சாந்தமாய் இரு! முக்தியை அடைவாய்!’’ என்று ஆசி கூறினார்கள்.

கூடவே மருமகளிடம், ‘‘மருமகளே! பத்மாவதி! கணவனையே தெய்வமாகக் கருதி இரு!’’ என்றார்கள். அதன் பின் நாராயண சாஸ்திரியும் கமலாபாயும் காடு சென்று, பகவானைத் தியானித்து மகிழ்ச்சியோடு இருந்தார்கள். அதே சமயம், ெஜயதேவரும் பத்மாவதியும் பெற்றோர்கள் வனவாசம் போனதை நினைத்துச் சற்று அயர்ச்சியோடு, ‘‘இன்னும் சில நாட்களில் நாமும் வனவாசம் எனும் வானப்பிரஸ்த நிலையை மேற்கொள்ள வேண்டும்’’ என்று அழுத்தமாக நினைத்தார்கள்.

அந்த எண்ணத்தைத் தெய்வம் வேறுவிதமாகச் செயல்படுத்தப் போகிறது. நாராயண சாஸ்திரியும் கமலாபாயும் தவம் செய்யக் காட்டிற்குச் சென்ற பிறகு, ெஜயதேவரும் பத்மாவதியும் நல்லவிதமாக வாழ்ந்து வந்தார்கள். செல்வ வளம் மிகுந்த குடும்பமாக இருந்தும், ெஜயதேவரின் மனம், ஆத்ம ஞான முன்னேற்றத்திலேயே இருந்தது. பிரம்ம ஞான எண்ணமும், ஜீவ காருண்ய சிந்தனையும் வளரத் தொடங்கின. ெஜய தேவர் காலை முதல் மாலை வரை தன்னை அறிந்த பிரம்ம ஞானிகள், தவறாமல் காயத்ரீ ஜபம் செய்யும் அந்தணர்கள், அதிதிகள் (எதிர்பாராமல் வருபவர்) ஆகியோருக்கு, இல்லையென்று சொல்லாமல் தான – தர்மம் செய்து வந்தார்.

இதன் காரணமாக, ெஜயதேவரிடம் இருந்த செல்வங்கள் எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. பசு மாடுகள் நிறைந்திருந்த அவர் வீட்டுத் தொழுவத்தில் ஒரு பசுமாடுகூட இல்லை. அதாவது அவர் பசுமாடுகளை எல்லாம் தான – தர்மம் செய்துவிட்டார் என்பது பொருள். தானியங்கள் எல்லாம் நிறைந் திருந்த ஞானதேவரின் வீட்டில், தவிடுகூட இல்லாமல் போனது; வீட்டையும் விற்றுத் தான – தர்மம் செய்தார் ெஜயதேவர்.

ெஜயதேவர் மனைவியின் கழுத்தில் திருமாங்கல்யம் தவிர, பொட்டுத்தங்கம் இல்லை; மாளிகை போன்ற வீட்டில் வாழ்ந்தவர்கள், சத்திரம் – சாவடிகளில் தங்கும் நிலைக்கு உள்ளானார்கள். காலையில் எழுந்திருப்பது, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து பகவான நினைத்து, பகவான் நாமங்களை வாயால் ஜபிப்பது என்று இருந்த ெஜயதேவர், அதன்பின் பிட்சை எடுக்கச் செல்வார்; நல்லெண்ணமும் கருணை உள்ளமும் கொண்டவர்கள், ெஜயதேவரின் பிட்சா பாத்திரத்தில் தங்களால் இயன்றதைப் போடுவார்கள்.

அதன்பின் ெஜயதேவர் தம் இருப்பிடம் திரும்பி, ‘‘பத்மாவதி! தர்மசிந்தனை உள்ளவர்கள் அளித்தது இது. இந்தா!’’ என்று மனைவியிடம் அளிப்பார். மறுபடியும் குளத்தில் நீராடி பூஜை – புராணம் படிப்பது, அதன்பின் பாகவதர்களைத் தேடிப்போய் அழைத்து வந்து, அவர்களுக்கு மரியாதைகள் செய்து உணவும் அளித்து வழிபட்டு, வழியனுப்பி வைப்பார் ெஜயதேவர். ஒருநாள்… பிட்சையெடுத்து முடித்த ெஜயதேவர் திரும்பும் போது, பாகவதத் துறவி ஒருவரைக்கண்டு அழைத்து வந்தார்.

மனைவியிடம் பிட்சைப் பொருளைக் கொடுத்துவிட்டு, வழக்கப்படிச் செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு, அழைத்து வந்த பாகவதருடன் சேர்ந்து பகவானின் திருநாமங்களைத் தியானித்தார். அதன்பின் பகவான் மீது கீர்த்தனைகளும் (பாடல்) அஷ்டகங்களும் எழுதிப்பாடித் துதித்துக் கொண்டிருந்தார் ெஜயதேவர். அதற்குள் கணவர் தந்த பொருட்களை வைத்துப் பல விதமாகவும் சமையலை முடித்த பத்மாவதி, கணவரிடம் வந்து அவரை வணங்கித் தகவலைச் சொன்னாள். அதைக் கேட்ட ெஜயதேவர், தன்னுடன் இருந்த பாகவதத் துறவியையும் அழைத்துகொண்டு உணவருந்த சென்றார்.

இருவரையும் இலையின் முன்னால் அமரவைத்த பத்மாவதி, பக்குவப்படுத்தி வைத்திருந்த உணவு வகைகளைப் பரிமாறி னாள். உணவுண்டு முடித்ததும் துறவியை அமரவைத்து, அவருக்குத் தாம்பூலம் அளித்துச் சந்தனம் பூசினார்கள். மகிழ்வாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யோக சாதனைகளைக் குறித்துத் துறவியிடம் விசாரித்தார் ெஜயதேவர்.
துறவி, ெஜயதேவருக்கு யோக சாதனைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து, தியானம் செய்யும் வழி முறைகளையும் உபதேசித்தார்.

அந்த உபதேசங்களை அப்போதே செயல்படுத்தத் தொடங்கிய ெஜயதேவர், சற்று நேரத்திலேயே ஆனந்தக் கண்ணீர் ததும்ப சமாதி நிலையில் இருந்தார். அந்த நேரத்தில் கணவரின் நிலைக்கண்ட பத்மாவதி பிரமித்தாள்; வந்திருந்த துறவிக்கு வணக்கம் செலுத்தி, அவரை வழியனுப்பி வைத்தாள். அதன்பின் கணவர் பக்கம் திரும்பிய பத்மாவதி, அவருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்யத் தொடங்கிய போது, சற்று நேரத்திலேயே ெஜயதேவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.

பிறகு அடிக்கடித் தியான யோகத்தில் அமர்ந்த ெஜயதேவர், அந்தத் தியான யோக அனுபவங்களையெல்லாம் அப்படியே பாடல்களாகவும் அஷ்டகங்களாகவும் பாடினார். அந்த ஊர் மக்கள் எல்லோரும் ெஜயதேவரின் பாடல்களைப் பக்திப் பரவசத்தோடு, பாராயணம் செய்யத் தொடங்கினார்கள். பாட்டு மட்டுமல்ல; ெஜயதேவரின் பாடல்களைப்பாடி வீடுகளிலும் ஆலயங்களிலும் நடனமாடத் தொடங்கினார்கள்.

இந்தத் தகவல் அந்த ஊர் அரசருக்கும் தெரிந்தது. அவர் நாட்டை நன்கு காத்து வந்ததுடன், கவிதைகள் எழுதுவதிலும் பெரும் திறமைசாலியாக இருந்தார். ஒவ்வோர் ஆண்டும் புதிது புதிதாகக் கீர்த்தனைகள் – பாடல்கள் எழுதி, அப்பாடல்களை ஜகந்நாதபுரியில் திருவிழா நடக்கும் போது, அங்கே அரங்கேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அரசர். அந்த ஆண்டும் வழக்கப்படிப் பாடல்கள் எழுதினார். அந்தப் பாடல்களையெல்லாம், ஊரில் திறமைசாலிகளான அடியார்கள் பலரை அழைத்து, அந்த அடியார்களிடம் பகவான் மீது தான் எழுதிய பாடல்களையெல்லாம் அளித்தார்; ‘‘இந்தப் பாடல்களையெல்லாம் பல இடங்களிலும் பாடி ஆடுங்கள்!’’ என்று சொல்லி அளித்தார்; பலமுறைகள் சொல்லவும் செய்தார்.

ஆனால், யாரும் மன்னர் பேச்சைக் கேட்பதாக இல்லை. அவர்கள் எல்லாம் ெஜயதேவரின் பாடல்களைப்பாடி, ஆடிக் கொண்டிருந்தார்கள். மன்னரால் தாங்க முடியவில்லை. பாகவத முக்கியஸ்தர்களை அழைத்து, ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நான் எழுதிய பாடல்களும் ஜகந்நாதப் பெருமாள் மீது பாடப்பட்ட பாடல்கள் தானே? இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் ஏன் இதைப் பாடக் கூடாது? ெஜயதேவர் இயற்றிய அஷ்டபதிகளை மட்டும் நீங்கள் ஏன் துதித்துப்பாட வேண்டும்? அதில் என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது?’’ என்று கோபித்துக் கொண்டார். அதற்குப் பாகவத முக்கியஸ்தர்கள், ‘‘மன்னா! உங்கள் பாடல்களுக்குப் பகவான் அங்கீகாரம் அளித்தால், நாங்கள் எல்லோரும் அதை ஏற்றுப் பாடுவோம்’’ என்றார்கள்.

அதற்கு என்ன செய்யலாம்? – என்று எல்லோரும் கூடி முடிவெடுத்தார்கள். ‘‘மன்னரின் பாடல்கள் அடங்கிய நூலையும் ெஜயதேவரின் பாடல்கள் அடங்கிய நூலையும் பகவான் ஜகந்நாதரின் திருவடிகளில் வைத்துக் கதவைக் காப்பிட்டுவிடலாம். மறுநாள் வந்துபார்க்கலாம். யார் பாடல்களைப் பகவான் ஏற்றுக் கொள்கிறார் என்பது தெரிந்துவிடும்’’ என்பதே அவர்கள் எடுத்த முடிவு. அதன்படியே செய்தார்கள். பாடல்கள் அடங்கிய நூல்களைப் பகவான் திருவடிகளில் வைத்து வேண்டி, கதவுகளைக் காப்பிட்டார்கள்.

(தொடரும்)

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post ஜெயதேவர் appeared first on Dinakaran.

Tags : Jayadevar ,Bhagtha ,1 ,Jagannath ,Narayana Shastri ,Bilwakam ,KENDULI ,
× RELATED ராகி ஸ்மூத்தி