×

மதுரையில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் ‘ஜரூர்’: அழகர் இறங்குமிடத்தில் அமைச்சர்கள் ஆய்வு

* கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழா துவங்கி நடந்து வரும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் வேகமடைந்துள்ளன. மீனாட்சி கோயில், அழகர் இறங்குமிடத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாளாக மே 2ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனை நேற்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கோயில் கமிஷனர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேடை அமைப்பு, பக்தர்கள் வருகை மற்றும் அவர்களின் பாதுகாப்பு, பிரசாத பைகள் வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

மதுரையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதி ஆழ்வார்புரம் வைகை கரையில் நடக்கிறது. இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுவாமி வந்து செல்லும் வசதிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை சித்திரைத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்து பேசும்போது, ‘‘கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும்போது 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். தேரோட்டத்தின்போது குறுக்கே செல்லும் உயரழுத்த மின்கம்பிளை அகற்றிட வேண்டும். பணியாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அழைத்துக்கொள்ளலாம். இதேபோல் சுகாதாரப்பணிகளுக்கும் அருகாமை உள்ளாட்சி அலுவலகங்களில் இருந்து பணியாளர்களை அழைக்கலாம். விழா காலங்களில் மின்சாரம் பொதுமக்களுக்கு தடையின்றி வழங்கவேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, ‘‘மதுரை என்றாலே சித்திரைத் திருவிழாதான். அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் வெளி மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் திரள்வதால், தமுக்கம் மைதானம், மீனாட்சி கல்லூரி, ராஜாஜி பூங்கா, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களை திறந்து வைத்து அங்கு அவர்களை தங்க வைக்கலாம். அழகர்கோவிலில் ஜமீன்தார்கள், நாட்டாமைகள் என பல மரியாதைக்காரர்கள் உண்டு. அவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் வாகன அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும். ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியிலும் கூடுமானவரை பொதுமக்கள் இறங்கி நிற்பதற்கும் அனுமதிக்கலாம்’’ என்றார். திருவிழா ஏற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் அமைச்சர்களிடம் விளக்கினர். அவர்கள் கூறியதாவது: மீனாட்சி திருக்கல்யாணம் தொடர்பாக ஆடி, சித்திரை வீதிகளில் தகர பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அமரும் இடத்தில் 150 மின்விசிறிகள், 20 இடங்களில் எல்இடி டிவிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கல்யாணத்தை தரிசிக்க 6 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்கப்படுவதுடன் 6 ஆயிரம் பேர் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலை சுற்றில 5 தீயணைப்பு வாகனங்கள், 5 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படுகிறது. சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், 40 ஆயிரம் லிட்டருக்கான குடிநீர் கொண்ட லாரிகள் நிறுத்தப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருக்கல்யாணத்தை பார்வையிட தனி இட வசதி செய்யப்படும்.

தேரோட்டத்தின்போது பொதுப்பணித்துறையினரின் சான்றிதழ் பெற்று, ஹைட்ராலிக் முறையில் தேர் இயக்கப்படும். தேரிலிருந்து 3 மீட்டர் தூரம் பொதுமக்கள் யாரும் வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அழகர்கோவிலில் இருந்து மே 3ம் தேதி மாலை புறப்படுவார். 4ம் தேதி எதிர்சேவை நடந்து, இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு சென்று மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை வாகனத்தில் அழகர் வழியில் உள்ள 52 மண்டபங்களில் எழுந்தருளி, மே 5ம் தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.15க்குள் அழகர் ஆற்றில் இறங்குவார். இந்த காட்சிகளை 16 இடங்களில் அகன்ற திரை டிவிக்கள் பொருத்தி ஒளிபரப்பு செய்வதுடன், 6 தீயணைப்பு வாகனங்கள் ஆற்றின் கரையோரம் நிறுத்தப்படும்.மாநகராட்சி சார்பில் சுகாதாரப்பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுகின்றனர். வைகையின் அருகே 9 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். அழகர் செல்லும் பாதையிலும் 16 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர். மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பேசும்போது, ‘‘சித்திரைத்திருவிழாவிற்காக பிற மாவட்டங்களில் இருந்து 5 எஸ்பி, 20 ஏடிஎஸ்பி, 25 டிஎஸ்பி மற்றும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். தினமும் சுவாமி, அம்மன் வலம் வரும் பகுதியில் உதவி கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு தரப்பட்டு, வாகனப்போக்குவரத்து சீர் செய்யப்படுகிறது. திருவிழா காலங்களில் எங்கெங்கு வாகனம் நிறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்கள் துறை பங்களிப்பு, ஏற்பாடுகள் குறித்து விளக்கினர்.

The post மதுரையில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் ‘ஜரூர்’: அழகர் இறங்குமிடத்தில் அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Jaroor ,Madurai ,Alaghar ,
× RELATED வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி