×

ஜன. 31 முதல் பிப். 9 வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் பிப்.1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாட்டின் 17வது மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தேதி குறித்த விவரங்களை பிப்ரவரி மாதம் அறிவிக்கவும் நேற்று முன்தினம் நடந்த அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் பதிவில், ‘’நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும். இது 17வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர். இது ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்,’’ என்று கூறியுள்ளார். இடைக்கால பட்ஜெட் என்பதால் நிதியாண்டின் முதல் 4 மாதத்துக்கான செலவு கணக்கு மட்டும் தாக்கல் செய்யப்படும். இதில், வரிச் சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாது.

The post ஜன. 31 முதல் பிப். 9 வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் பிப்.1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் பாஜக...