×

இஸ்ரேல்-காசா போரினை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: இஸ்ரேல்-காசா போரினை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது செல்வாக்கை பயன்படுத்தி பிரதமர் உலக நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போரை நிறுத்த வழிவகுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், இஸ்ரேல் – காசா போர் கடந்த 14 நாட்களாக நடைபெற்று வருவதும், அங்குள்ள அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதும், மனித உரிமைகள் மீறப்படுவதும் நம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. இந்தப் போரினை பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்று கூறினாலும், இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிறுவர், சிறுமியர், இளம் பெண்கள், முதியோர் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் காசாவிலிருந்து வெளியேறி எங்கு செல்வது, எப்படி வாழ்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

காசாவில் கடந்த இரண்டு வாரமாக மின்சாரம், தண்ணீர் ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. காசாவில் உள்ள மருத்துவமனை தாக்கப்பட்டதில் மட்டும் 500 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இது உலகப் போராக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுவாக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

அமைதியின் அடித்தளமாக விளங்கும் இந்தியத் திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, உலகத்தில் போர் மேகங்கள் மறைந்து அமைதி நிலவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக் கூடியவர். இந்தியாவை வல்லரசாக்க வேண்டும், இந்திய ராணுவத்தை வலிமை மிக்க ராணுவமாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருந்தாலும், அது நம் நாட்டின் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பிற நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக அல்ல. இன்னும் சொல்லப் போனால், பிற நாடுகளின் சுதந்திர உணர்வை போற்றி மதிக்கக் கூடியவர் இந்தியப் பிரதமர். பயங்கரவாதத்தை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நம் பாரதப் பிரதமர்.

உலகத் தலைவர்களின் நன் மதிப்பையும், அன்பையும் பெற்றிருக்கும் பாரதப் பிரதமர், இஸ்ரேல் நாட்டு பிரதமருடனும், பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் தலைவருடனும் இது குறித்து பேசியிருப்பதும், பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் தலைவரிடம் உறுதி அளித்திருப்பதும் ஆறுதலைத் தருகிறது.

இருப்பினும், இஸ்ரேல் – காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உலக நாட்டுத் தலைவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி பேச்சு வார்த்தைக்கு வழிவகுக்கவும், அமைதியை நிலை நாட்டவும், அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழவும், உலகப் பொருளாதாரம் மேம்படவும் இந்தியப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

The post இஸ்ரேல்-காசா போரினை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Israel-Gaza ,O. Panneerselvam ,Chennai ,Modi ,Israel-Gaza war ,O. ,Panneerselvam ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில்...