கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்களை அடிக்க முடியும் என்று கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் மூலமாக பலரும் விளம்பரம் தேடி வந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கே விளம்பரமாக அமைந்தவர் ரிங்கு சிங். யாஷ் தயாள் பவுலிங்கில் தொடர்ந்து 5 சிக்ஸ் விளாசி ரிங்கு சிங் கேகேஆர் அணிக்காக போட்டியை வென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த வகையில் ‘ஜென் போல்ட்’ நட்சத்திரமான ரிங்கு சிங், அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
நான் பொதுவாக 5 அல்லது 6வது இடத்தில் பேட் செய்கிறேன். உத்தரப் பிரதேச அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் இதையே செய்து வருகிறேன். அதனால் பினிஷிங் ரோலில் ஆடுவது எனக்கு பழக்கமாகிவிட்டது. 14 போட்டிகள் ஆட வேண்டிய ஐபிஎல் தொடரில், பிட்னஸ் ரொம்பவே முக்கியம். வீரர்கள் தங்கள் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். அதனால் பிட்னஸில் அதிக கவனம் செலுத்துகிறேன். இதற்காக டோனியிடம் அடிக்கடி பேசுவேன். அவர் எனக்கு எப்போதும் நிதானமாக இருந்து, போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாட அறிவுறுத்துவார்.
கேகேஆர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரஸ்ஸல் டெத் ஓவர்களில் எப்படி ஆடுகிறார், எப்படி உடலில் உள்ள வலிமையை பயன்படுத்துகிறார் என்பதைக் கவனமாக பார்க்கிறேன். அதில் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். ஐபிஎல் தொடரில் 300 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை அடைய கூடிய நிலை உருவாகி இருக்கிறது. அதனை உறுதியாக நம்புகிறேன். கடந்த வருடம் பஞ்சாப் 262 ரன்களை எங்களுக்கு எதிராக சேஸ் செய்தது. இந்த சீசனில் எல்லா அணிகளும் வலுவாக உள்ளன. யார் வேண்டுமானாலும் 300 ரன்களை அடிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஐபிஎல் தொடரில் 300 ரன் அடிப்பது சாத்தியம்தான்: ரிங்குசிங் சொல்கிறார் appeared first on Dinakaran.
