×

தொழில் தொடங்க ஏற்ற சூழல், வாய்ப்புகள் உள்ளதை எடுத்து கூறி தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும்: இந்திய மக்களின் கலாசார நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இந்த கலாசார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயது அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வருகின்ற 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

அதற்கு அழைப்பு விடுக்கத்தான், இந்த சுற்றுப்பயணம். நிசான், தோஷிபா, யமஹா, உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான நட்பு என்பது பரந்த அடிப்படையில் செயல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது. வர்த்தக உறவுகளையும் தாண்டிய நட்புறவாக அவை அமைய வேண்டும். ஜப்பான் – இந்திய நட்புறவானது, புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். 2012ம் ஆண்டு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஆன ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

‘மீண்டும் ஜப்பான் – துடிப்பான இந்தியா – புதிய பார்வைகள் – புதிய பரிமாற்றங்கள்’ என்று அதற்கு தலைப்பு தரப்பட்டு இரண்டு நாட்டிலும் கலாசார விழாக்கள் நடைபெற்றன. இத்தகைய கலாசார தொடர்புகள் தொடர வேண்டும். ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் நிக்கிலேஷ் கிரி சிறப்பாக பணியாற்றி, ஜப்பானில் உள்ள இந்திய சங்கங்களுக்கு இணைப்புப் பாலமாக இருப்பதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997ம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008ம் ஆண்டும் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக் கூற வேண்டும், தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தொழில் தொடங்க ஏற்ற சூழல், வாய்ப்புகள் உள்ளதை எடுத்து கூறி தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும்: இந்திய மக்களின் கலாசார நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,G.K. Stalin ,Chennai ,Indian Embassy ,Osaka, ,Osaka ,Chief Minister of the Cultural Programme of the Indian People ,B.C. ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...