×

11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு துறை பரபரப்பு தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்களுக்கான புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட 2019-20ம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படவில்லை. முந்தைய அரசு ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் என்று தனித்தனியாக அரசாணைகளை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளை கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்காக 1 லட்சத்து 77,482 சதுர அடி கட்டிடம் கட்டப்படாமல் பொதுமக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் சுரண்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான அரசாணையில் எவ்வளவு சதுர அடிக்கு கட்டுமானம் மேற்கொள்ளப்பட உள்ளது என்ற விவரமே இல்லை.

பொதுப்பணித்துறை 11 லட்சத்து 23,510 சதுர அடிக்கு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகிறது, ஆனால், ஒப்பந்தத்தில் 10 லட்சத்து 32,213 சதுர அடி மட்டுமே உள்ளது. இதேபோல எஞ்சிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய முதல்வர் மற்றும் துறை அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை கூட்டணி அமைத்து சதி செய்து கோடிக்கணக்கான தொகையை முறைகேடு செய்துள்ளனர். குறிப்பாக, பொதுப்பணித்துறையை கவனித்து வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ராஜமோகன், தேசிய மருத்துவக் கவுன்சில் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் ஆகியோருக்கு இந்த முறைகேட்டில் முக்கியப்பங்கு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு உண்டு என்பதால், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான், முறைகேடு புகாரில் ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது.

டெண்டர் மற்றும் கட்டுமானத்தில் முறைகேடு என இரண்டு விதமாக முறைகேடு நடைபெற்றுள்ளது. கட்டுமானம் குறித்து ஆய்வு செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை மீது திருப்தி தெரிவித்ததால் இந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

* முறைகேடு புகாரில் ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. டெண்டர் மற்றும் கட்டுமானத்தில் முறைகேடு என இரண்டு விதமாக முறைகேடு நடைபெற்றுள்ளது.

The post 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு துறை பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,ICourt ,Chennai ,chief minister ,AIADMK ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...