
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி, 64 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. லீட்ஸ் நகரில் நேற்று துவங்கிய முதல் டெஸ்டின் முதல் நாளில், இந்திய அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் அற்புதமாக ஆடி 91 ரன் குவித்திருந்தபோது, 42 ரன்னில் ராகுல் ஆட்டமிழந்தார்.
பின் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ரன் எடுக்காமல் அவுட்டானார். பின், ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சுப்மன் கில் இணை சேர்ந்தார். ஜெய்ஸ்வால், 123 பந்துகளில் சதமடித்தார். சிறிது நேரத்தில் கில்லும், 56 பந்துகளில் 50 ரன்னை எட்டினார். தேனீர் இடைவேளைக்கு பின், ஜெய்ஸ்வால் (101 ரன்) ஆட்டமிழந்தார். இந்திய அணி, 64 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
கில் 82, ரிஷப் பண்ட் 12 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில், பென் ஸ்டோக்ஸ் 2, பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
The post இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வலுவான நிலையில் இந்தியா: ஜெய்ஸ்வால் அதிரடி சதம் appeared first on Dinakaran.
