×

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு இடையே சிக்கலை ஏற்படுத்தியுள்ள 223 தொகுதிகள்?: தொகுதி பங்கீடு குறித்து தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி:‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு இடையே சிக்கலை ஏற்படுத்தியுள்ள 223 தொகுதிகளில் தொகுதி பங்கீடு குறித்து எதிர்கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, ​​‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே பரஸ்பர ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

குறிப்பாக மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர். அதனால் ‘இந்தி பெல்ட்’ என்று கூறப்படும் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தோற்கடித்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் அவசர கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ெதாடங்கிவிட்டன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி, மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் பிரிவு), பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் தலைவர்கள் பட்டியலில் உள்ளனர்.

மேற்கண்ட தலைவர்கள் அனைவரும் தேசிய அளவில் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். ஆனால் தங்கள் மாநிலங்களில் தங்கள் பிடியை அல்லது கூட்டணி கட்சிகளுக்கு குறைந்தபட்சம் தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. குறிப்பாக மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள், காங்கிரசுக்கு சீட் ஒதுக்குவதில் கொள்கை ரீதியாக முரண்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 223 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீட்டில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் மேற்கண்ட மாநிலங்களின் ‘இந்தியா’ கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

The post ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு இடையே சிக்கலை ஏற்படுத்தியுள்ள 223 தொகுதிகள்?: தொகுதி பங்கீடு குறித்து தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : India ,NEW DELHI ,COALITION PARTIES ,BJP government ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை...