×

இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் 5 மாநில தேர்தல் அரையிறுதி போட்டி நாடாளுமன்ற தேர்தல் இறுதி போட்டி: காங்கிரஸ் தேசிய நிர்வாகி பேட்டி

சென்னை: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் அரையிறுதி போட்டி. நாடாளுமன்ற தேர்தல் தான் இறுதி போட்டி என்றும், இந்தியா கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தேசிய நிர்வாகி ராஜீவ் கவுடா கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித்துறை சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியும் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பேராசிரியர் ராமச்சந்திரன் எழுதிய, ‘இந்திய ஜனநாயகத்தின் குரலாய் ராகுல் காந்தி’ என்ற புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை தலைவர் ராஜீவ் கவுடா வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் பெற்றுக் கொண்டார்கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் இல.பாஸ்கரன், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் முத்தழகன் மற்றும் நிர்வாகிகள் அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து, ஆராய்ச்சி துறை அகில இந்திய தலைவர் ராஜீவ் கவுடா நிருபர்களிடம் கூறியதாவது: ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்லிக் கொண்டிருந்தார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்டுவது போன்று பல்வேறு மாயைகளை ஏற்படுத்தினர். மக்களை திசை திருப்பவும் பார்த்தனர். அதையெல்லாம் கடந்து, தற்போது தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டமன்றத் தேர்தலை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முழு நிலையில் தன்னை தயார்படுத்தி வைத்துள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த தேர்தல் என்பது அரையிறுதி போட்டி ஆகும். நாடாளுமன்ற தேர்தல் தான் இறுதி போட்டியாகும். இந்த அரை இறுதிப் போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க போகின்றோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் அலை வீசுகிறது. மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. இதே நிலை மிசோரம் மாநிலத்திலும் எதிரொலிக்கும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புல்வாமா தாக்குதலை சொல்லி பாஜ வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை பாஜவால் எந்தவித நாடகத்தையும் நடத்த முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் பாஜ பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி 38 இடங்களில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

The post இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் 5 மாநில தேர்தல் அரையிறுதி போட்டி நாடாளுமன்ற தேர்தல் இறுதி போட்டி: காங்கிரஸ் தேசிய நிர்வாகி பேட்டி appeared first on Dinakaran.

Tags : 5 state election semi-finals ,India alliance ,Congress ,CHENNAI ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!