×

தமிழ்நாடு, புதுச்சேரியில் ரூ.1,08,364 கோடி வருமான வரி வசூல்: வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தகவல்

சென்னை: 2022-23ம் நிதியாண்டில் வருமான வரி வசூல் ரூ.1,08,364 கோடியாக அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலத்திற்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்: தமிழகம் – புதுச்சேரியில் 2022-23 ம் நிதியாண்டில் ரூ.1,08,364 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,05,300 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வரி வசூல் ரூ.3000 கோடி அதிகமாக கிடைத்துள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 20 சதவீதம் அதிகம். இந்திய அளவில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. தமிழகத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-24 ம் நிதி ஆண்டில் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயத்துள்ளோம். 2022-23 ம் நிதி ஆண்டில் வரி ஏய்ப்பு செய்த 7 பேர் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு வரி ஏய்ப்பு செய்த 7 பேருக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 7 பேருக்கு தண்டனை பெற்று இருப்பது இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.

* முதல் முறையாக தமிழில் கையேடு
டிடிஎஸ்(TDS) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருமான வரித்துறை சார்பில் முதல் முறையாக தமிழில் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதன் நகல் இணையதளத்திலும் வெளியிடப்படும். மேலும் வருமான வரி நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்க 16 தலைப்புகளில் காணொலிகள் தயாரிக்கப்பட்டு tnincometax.gov.in என்னும் வருமான வரி இணையத்தளத்திலும், youtube.com/@incometaxtamilnaduandpuduc9090 என்ற யூடியூப் தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

* காரைக்குடியில் வரி அருங்காட்சியம்
காரைக்குடியில் 100 ஆண்டு பழமையான வருமானவரித்துறை அலுவலகம் உள்ளது அந்த அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, நாட்டிலேயே முதல்முறையாக காரைக்குடியில் வரி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஓலைச்சுவடிகள், பழமையான வருமான வரி கணக்குகள் கையாளப்பட்டது. அவை அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

* வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிப்பு
‘’வருமான வரியை சரியாக செலு.த்தாமல் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிப்பது முன்னர் சவாலாக இருந்தது. ஆனால் இப்போது சுலபமாக கண்டுபிடித்து விடுவோம். 30 லட்சத்திற்கு மேல் இடம் வாங்கினால், 10 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் வைத்திருந்தால் 2 லட்சத்திற்கு மேல் பொருட்கள் வாங்கினால் கண்காணிக்கப்படுவார்கள்’’ என்று தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தெரிவித்தார்.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் ரூ.1,08,364 கோடி வருமான வரி வசூல்: வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Puducherry, Tamil Nadu ,Chief Commissioner ,Income ,Tax ,Ravichandran ,Chennai ,Income Tax Department ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்