×

தொடர் மழை, அணை திறப்பு எதிரொலி; வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: மதுரை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுரை: தொடர் மழை, வைகை அணை திறப்பு எதிரொலியாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டம், வருசநாடு, வெள்ளிமலை, கொட்டகுடி ஆறு, மூல வைகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, 71 அடி உயரமுள்ள வைகை அணை, முழு கொள்ளளவான 70 அடியை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,319 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து, அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் பாசனத்திற்காகவும் வைகை அணை திறக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியுள்ளது. இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஓடுவதால் யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் தடுப்பணை, ஓபுளா படித்துறை, ஆரப்பாளையம் ஆகிய மதுரை வைகையாற்று கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரையோரங்களில் பொதுமக்கள் செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விழிப்புணர்வு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

The post தொடர் மழை, அணை திறப்பு எதிரொலி; வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: மதுரை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaigayayar ,Madurai ,Vaigai River ,Vaigai Dam ,Vaigaya River ,Dinakaran ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...