×

பெரியபாளையம் காவலர் குடியிருப்பு அருகில் துருப்பிடித்து பாழாகி கிடக்கும் பறிமுதல் வாகனங்கள்: அப்புறப்படுத்த கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் காவலர் குடியிருப்பு அருகில் பல மாதங்களாக வெயில், மழையில் நனைந்து எதற்குமே உதவாமல் துருப்பிடித்து பாழாகி கிடக்கும் பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் 73 கிராமங்கள் உள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், சப் – இன்ஸ்பெக்டர் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பனியாற்றி வருகிறார்கள். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள், லாரி, டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பிடிபட்ட வாகனங்கள் பெரியபாளையம் – புதுவாயல் சாலையில் உள்ள பெரியபாளையம் காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து எதற்குமே உதவாமல் துருப்பிடித்து காயலான் கடைக்கு செல்லும் அளவுக்கு சேதமடைந்து, புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் பல நாட்களாக மக்கி மண்ணோடு மண்ணாகி வரும் இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும் அல்லது இந்த வாகனங்கள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பெரியபாளையம் காவல் நிலையத்தில் மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பிடிப்பட்டுள்ள வாகனங்கள் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதனால் காவலர் குடியிருப்பு பகுதி காயலான் கடை போல் காட்சியளிக்கிறது. மேலும் பறிமுதல் வாகனங்களை சுற்றி தற்போது புதர்கள் மண்டிக்கிடப்பதால் விஷஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. எனவே இந்த வாகனங்களை ஏலம் விடுவதோ அல்லது வழக்கை விரைந்து முடித்து சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கவோ வேண்டும் என கூறினர்.

The post பெரியபாளையம் காவலர் குடியிருப்பு அருகில் துருப்பிடித்து பாழாகி கிடக்கும் பறிமுதல் வாகனங்கள்: அப்புறப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Uthukkottai ,
× RELATED பெரியபாளையம் அருகே ஏகாத்தம்மன்...