×

ஐதராபாத் ஸ்டேட் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி 22 ஆண்டுகளாக சிபிஐக்கு தண்ணி காட்டியவர் சிக்கினார்

* பல்வேறு மாநிலங்களில் அலையவிட்டவர், இலங்கைக்கு தப்ப முயன்றபோது கைது, சாமியாராகி ஆசிரமத்தில் ரூ.70 லட்சம் சுருட்டியதும் அம்பலம்

பேட்டை: ஐதராபாத் ஸ்டேட் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி செய்துவிட்டு பல்வேறு மாநிலங்களில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை நெல்லையில் சிபிஐ கைது செய்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஸ்டேட் வங்கி கிளையில் கணினி ஆபரேட்டராக பணியாற்றியவர் சலபதிராவ். இவர் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் பெயரில் போலி சம்பள பட்டியல் தயாரித்து வங்கியில் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து 2002 மே 3ம் தேதி சலபதிராவ் மீது சிபிஐ வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டது.

இதில் சலபதிராவ் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நபர்களின் பெயரில் போலி சம்பளப் பட்டியல் தயாரித்து பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டு, 2004 டிசம்பரில் இந்த வழக்கில் சிபிஐ சார்பில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் சலபதிராவின் மனைவி 2004 ஜூலை முதல் தனது கணவரை காணவில்லை என காமத்திபுரா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து கணவர் காணாமல் போன நிலையில் அவரை இறந்து விட்டதாக அறிவிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

கடந்த 2013 ஏப்ரலில் சலபதிராவை தேடப்படும் குற்றவாளியாக சிபிஐ அறிவித்து தேடி வந்தது. மேலும் அவரது சொத்துக்களை முடக்க முயற்சி செய்தபோது, நீதிமன்றத்தில் தடையாணை பெற்று சலபதிராவின் மனைவி தடுத்திருந்தார். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பேட்டை அருகே நரசிங்கநல்லூரில் நண்பர் ஒருவர் வீட்டில் தனது அடையாளங்கள், பெயரை மாற்றி அவர் தங்கி இருப்பதை கண்டறிந்த சிபிஐ அவரை கைது செய்தது. விசாரணையில், சலபதிராவ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.

ஐதராபாத்தில் இருந்து தப்பிய சலபதிராவ், சேலம் பகுதியில் 2007ல் பெயரை வினித்குமார் என மாற்றி தங்கியுள்ளார். அங்கு ஒரு பெண்ணை மணந்து புதிதாக ஆதார் அட்டை பெற்றுள்ளார். இருப்பினும் அவர், முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்தது. சிபிஐ அவரை தேடி சேலம் சென்றபோது, 2014ல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் கடன் மீட்பு முகவராக பணியாற்றி வந்துள்ளார்.

அங்கிருந்து உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூருக்கு சென்று ஒரு பள்ளியில் பணியாற்றுவதாக கிடைத்த தகவலையடுத்து சிபிஐ அங்கு விரைந்தது. அப்போது 2016ல் அங்கிருந்து தப்பியதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் சலபதிராவ் பயன்படுத்திய வீட்டின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளங்களை வைத்து சிபிஐ தீவிரமாக தேடத் தொடங்கியது.

இதனால் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் உள்ள வெருள் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் விதித்மானந்த தீர்த்தர் என்ற பெயருடன் சாமியாராக தங்கியிருந்துள்ளார். அங்கு அவருக்கென்று பக்தர்கள் கூட்டம் கூடிய நிலையில் ஆசிரமத்தில் ரூ.70 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாராம். பின்னர் அங்கிருந்து 2021ல் வெளியேறி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் ஆசிரமத்திற்கும், பின்னர் கடந்த ஜூலை 8ம்தேதி வெளியேறி, நெல்லை மாவட்டம் பேட்டை நரசிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் ஷேக்மன்சூர் (50) என்பவரது வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

நெல்லையில் பதுங்கிய அவர் கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்றதும் தெரியவந்தது. ஷேக்மன்சூர் தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வறியவர் பசி போக்கும் ஒரு அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். ராஜஸ்தான் ஆசிரமத்தில் சலபதிராவ் பணிபுரிந்த போது ஷேக்மன்சூர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆதரவற்ற நிலையில் யாசகம் பெறும் வறியவர்களை மீட்டு அந்த ஆசிரமத்தில் சேர்த்தபோது சலபதிராவுடன் அறிமுகமாகியுள்ளார்.

இதை பயன்படுத்தியே சலபதிராவ் நெல்லை வந்து அவரது வீட்டில் பதுங்கியிருந்துள்ளார். அங்குதான் சிபிஐ அதிகாரிகள் சலபதிராவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 16ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பல்வேறு மாநிலங்களில் 22 ஆண்டுகளாக பெயரை மாற்றி தலைமறைவாக இருந்தவரை நெல்லையில் சிபிஐ கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மகனுடன் செல்போன் பேச்சால் பிடிபட்டார்
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சலபதி ராவ் தொடர்ந்து 22 வருடம் சிபிஐ பிடியில் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அப்போத 8 முதல் 10 சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த சலபதி ராவ் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவேளையில் தனது முதல் மனைவி, மகனுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கண்காணித்து வந்த சிபிஐ டெக்னிக்கல் பிரிவு போலீசார் அவர் நெல்லையில் பதுங்கி இருக்கும் தகவலை கண்டறிந்து பொறி வைத்து பிடித்துள்ளனர்.

The post ஐதராபாத் ஸ்டேட் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி 22 ஆண்டுகளாக சிபிஐக்கு தண்ணி காட்டியவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Hyderabad State Bank ,CBI ,Sri Lanka ,Ambalampet ,Dinakaran ,
× RELATED பொருளாதார நெருக்கடியில் இருந்து...