×

பணிவும், நன்றி உணர்வும் நிறைந்த 9 ஆண்டு ஆட்சி: பிரதமர் மோடி உருக்கம்

புதுடெல்லி: பாஜ 9 ஆண்டு கால ஆட்சி பணிவும், நன்றி உணர்வும் நிறைந்து இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, தனது அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானதே என கூறி உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் மோடி 2வது முறையாக மே 30ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார். இதையொட்டி அவர் நேற்று தனது டிவிட்டரில், ‘‘இன்று, நாங்கள் நாட்டிற்கு சேவை செய்வதில் 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் வேளையில், நான் பணிவுடனும், நன்றி உணர்வுடனும் இருக்கிறேன். இந்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தின் அடிப்படையிலானது. வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம். ஒவ்வொரு குடிமகனையும் மேம்படுத்துவது மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் பணி இனியும் தொடரும்’’ என கூறி உள்ளார்.

* அஜ்மீரில் இன்று பிரம்மாண்ட பேரணி
9ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இன்று நடக்கும் பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கிஷன்கார்க் ஏர்போர்ட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புஷ்கர் பகுதிக்கு சென்று அங்கு பிரம்மா கோயிலில் அவர் வழிபட உள்ளார்.

* ஒரு மாத நிகழ்வுகள் தொடக்கம்
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் 9 ஆண்டு ஆட்சி நிறைவை ஒரு மாதத்திற்கு பிரமாண்டமாக கொண்டாட பாஜ ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் மூலம் லட்சக்கணக்கான மக்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒரு மாத நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கி ஜூன் 30 வரை நடத்தப்பட உள்ளது. இதில் நாடு முழுவதும், 51 பேரணிகள், 500 பொதுக் கூட்டங்கள் நடத்தி பாஜ சாதனைகள் மக்களுக்கு விவரிக்கப்பட உள்ளது. மேலும், பாஜவுக்கு ஆதரவு தர 9090902024 என்ற செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மிஸ்ட் கால் கொடுத்து பாஜ ஆட்சிக்கு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

The post பணிவும், நன்றி உணர்வும் நிறைந்த 9 ஆண்டு ஆட்சி: பிரதமர் மோடி உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,BJP ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?