×

209 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி; உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது ஆஸ்திரேலியா: இந்தியா மீண்டும் ஏமாற்றம்

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியை 209 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது. ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியுடன், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன் குவித்தது. ஹெட் 163, ஸ்மித் 121, வார்னர் 43, கேரி 48 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, ஷமி, ஷர்துல் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரகானே 89, ஷர்துல் 51, ஜடேஜா 48 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்காமல் ஏமாற்றமளித்தனர். 173 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 84.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. லபுஷேன் 41, ஸ்மித் 34, கிரீன் 25, ஸ்டார்க் 41, கேரி 66* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 3, உமேஷ், ஷமி தலா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 444 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந்தது. கில் 18, ரோகித் 43, புஜாரா 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

இந்திய வெற்றிக்கு இன்னும் 280 ரன் தேவை என்ற நிலையில் கோஹ்லி 44 ரன், ரகானே 20 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். கை வசம் 7 விக்கெட் இருக்க, ஓவருக்கு 3 ரன் எடுத்தாலே உலக சாம்பியனாகி விடலாம் என்பதால் இந்திய அணி நிச்சயம் சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்தனர். ஆனால், போலண்ட் வீசிய 47வது ஓவரில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரின் 3வது பந்தில் கோஹ்லி (49 ரன், 78 பந்து, 7 பவுண்டரி) ஸ்லிப் திசையில் ஸ்மித்தின் அற்புதமான டைவிங் கேட்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஜடேஜா 2 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட்டாக… இந்தியா 179/5 என திடீர் சரிவை சந்தித்ததுடன் தோல்வியின் பிடியிலும் சிக்கியது.

இந்திய அணியின் வெற்றி நம்பிக்கையை அடியோடு சிதைத்ததால் உற்சாகம் அடைந்த ஆஸ்திரேலியா தாக்குதலை தீவிரப்படுத்தியது. ரகானே 46 ரன் (108 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஸ்டார்க் வேகத்தில் வெளியேறினார். ஷர்துல் 0, உமேஷ் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, பரத் 23 ரன் எடுத்து லயன் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிராஜ் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 2வது இன்னிங்சில் 234 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா நேற்று 70 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் லயன் 4, போலண்ட் 3, ஸ்டார்க் 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 209 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடி ‘கதாயுதம்’ வடிவிலான கோப்பை மற்றும் முதல் பரிசாக ₹13.22 கோடியை தட்டிச் சென்றது. முதல் இன்னிங்சில் 163 ரன் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த இந்தியா ₹6.60 கோடியுடன் திருப்தி அடைந்தது. ஐசிசி உலக கோப்பை தொடர்களில் பட்டம் வெல்லும் வாய்ப்பை, இந்திய அணி தொடர்ச்சியாக வீணடித்து வருவது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றமடைய வைத்துள்ளது.

கேப்டனாக கடைசி டெஸ்ட்…
‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்காக இந்திய அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கேப்டனாக நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி இது தான். விரைவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’ என்று இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார்.

முதல் அணியாக சாதனை
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி உலக கோப்பை டி20… என அத்தனை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா வசப்படுத்தி உள்ளது.

The post 209 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி; உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது ஆஸ்திரேலியா: இந்தியா மீண்டும் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Australia ,World Test Champions ,India ,London ,Indian team ,ICC World Test Championship ,World Test ,Dinakaran ,
× RELATED இந்தியா-ஆஸி. தொடர் மதிப்பு மிக்க ஒன்றாக மாறி விட்டது