×

சென்னை, மதுரையில் நடைபெறும் ஹாக்கி; இளையோர் உலக கோப்பை இலச்சினை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்

சென்னை: சென்னை, மதுரை நகரங்களில் முதல் முறையாக 14வது எப்ஐஎச் இளையோர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. நவ.28ம் தேதி முதல் டிச.10ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், ஜெர்மனி, கனடா, வங்கதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, எகிப்து, தென் ஆப்ரிக்கா உள்பட 24 ஆண்கள் அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உலக கோப்பைக்கான இலச்சினையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலில் சிறப்பு வாய்ந்த உலக கோப்பை ஹாக்கிப்போட்டி சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒலிம்பிக், உலக கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எப்போதும் தொடர்கிறது.

சென்னையில் இதற்கு முன்பும் சர்வதேச ஹாக்கிப் போட்டிகள் நடந்துள்ளன. அதன்படி 1996ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை, 1999ம் ஆண்டு பாகிஸ்தான் தொடர், 2005ம் ஆண்டு மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பை 2007ம் ஆண்டு ஆசிய கோப்பை, 2008ம் ஆண்டு பெல்ஜியம் தொடர், 2023ம் ஆண்டு 7வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி என சென்னையில் சர்வதேச ஹாக்கிப் போட்டிகள் நடந்துள்ளன. இப்போது இளையோர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த தொகை போட்டிக்காக மட்டுமின்றி கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளுக்காகவும் செலவிடப்படும். மதுரை ஹாக்கி அரங்கம் சர்வதேச அளவில், சென்னை அரங்கம் போலவே மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் நமது மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு இளைஞர் நலன் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் போலோநாத், சேகர், வத்சவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post சென்னை, மதுரையில் நடைபெறும் ஹாக்கி; இளையோர் உலக கோப்பை இலச்சினை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai, Madurai ,Youth World Cup ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,14th FIH Youth World Cup Hockey ,Madurai ,India ,Argentina ,Belgium ,Germany ,Canada ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு