×
Saravana Stores

மூலிகைகளும் பயன்களும்!

நன்றி குங்குமம் டாக்டர்

வெப்பாலை

வெப்பாலை இலைகள் மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை அரைத்து விழுதாக்கி அக்கிப் புண்கள், பொன்னுக்கு வீங்கி, புட்டலாம்மை நோய்களுக்கு போட வலி, வீக்கத்தை தணிக்கும். இதன் இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து 5 நாட்கள் நல்ல சூரிய ஒளியில் படும்படி வைத்து நீலநிற வண்ணம் வந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் வைத்து உடம்பில் செதில் செதிலாக தோல் உரிதலும், அரிப்பும் உள்ள சொரியாஸிஸ் வந்த இடத்தில் தடவி வர குணமாகும்.

வெப்பாலை இலையோடு சிறிது உப்பு சேர்த்து மென்று துப்பி விட பல்வலி, பல்சொத்தை குணமாகும்.வெப்பாலை மரப்பட்டை சூரணம் 1 தேக்கரண்டி எடுத்து தேநீராக செய்து பருகினால் வயிற்றுப் பிரச்னைகளை தணிக்கும். இச்சூரணத்தோடு, 10 மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சரும நோய்கள், காய்ச்சல், பேதியை குணமாக்கும்.

தேற்றான்கொட்டை

தேற்றான்கொட்டை தண்ணீரை தெளிவுபடுத்துவதற்கும், பாரம்பரிய மருத்துவத்திற்கும், காகிதம், ஜவுளித்துறையிலும் பயன்படுத்தப்படும் பாலிசாக்கரைடு பசை தயாரிக்கப்பயன்படுகிறது.தேற்றான்கொட்டைப் பொடியுடன் தேன் கலந்து மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று போன்ற உபாதைகளுக்கு தேற்றான் கொட்டை சிறந்த மருந்தாகும்.

கண்களில் ஏற்படும் அதிக உஷ்ணம், எரிச்சல், வீக்கம் போன்ற உபாதைகளுக்கு இதன் பொடியை நீரில் குழைத்து பூசிவர கண் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
தேற்றான்கொட்டை ஜீரணத்திற்கும், சர்க்கரை அளவைக் குறைக்கவும், வயிற்றுப்போக்கு போன்றவைகளுக்கும் மருந்தாகிறது.இதன் வேரை அரைத்து தோல் அரிப்பு, எரிச்சல், அழற்சி பிற தோல் பிரச்னைகள் உள்ள இடத்தில் பூசிவர பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

கொழுப்பைக் குறைக்கவும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் ரத்தத்தை சீராக்கவும், சிறுநீர் கழித்தலைக் குறைக்கவும் பயன்படுகிறது. இதற்கு நீரை தெளிய வைக்கும் பண்பு உள்ளதால் கிளியரிங் நட்ஸ் அதாவது சுத்தம் செய்யும் கொட்டை என அழைக்கப்படுகிறது.

தர்ப்பைப் புல்லின் பயன்கள்!

தர்ப்பைப் புல் மிக தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்ப்பை கதிர் வீச்சினை எதிர்க்கும் சக்திகொண்ட தாவரமாகும்.தர்ப்பை புல்லில் அதிகமான தாமிரசத்து உள்ளது. நமது உடலில் உள்ளே புகும் தீமையை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல் சூடு குறையும். மன உளைச்சல் நீங்கி உறக்கம் நன்றாக வரும்.

பல நாட்களுக்கு நீரில் போட்டு வைத்தாலும் அழுகாது. சூரிய கிரகத்தின் போது இதற்கு வலிமை அதிகம். சிறுநீர் உபாதைகள், பித்த தோஷத்தைப் போக்க தர்ப்பைக் குடிநீர் செய்து அருந்தி வர குணமாகும். தொற்று உபாதைகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

பொடுதலை

பொடுதலை சிறந்த மூலிகையாகும். ஆறு, குளம் போன்ற இடங்களில் அதிகமாக வளரும் வெண்மை நிற பூக்களை உடைய செடி ஆகும். ஒரு லிட்டர் நீரில் ஒரு கைப்பிடி அளவு பொடுதலை இலை போட்டு 4ல் ஒருபங்காக காய்ச்சி 2 தேக்கரண்டி அளவு குடித்தால் பேதி, அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.பொடுதலை இலையின் சாறை பிழிந்து நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் 2 முறை தலையில் தேய்த்து குளித்து வர தோல் நோய்கள் தீரும்.

புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பொடுதலை இலை சேர்த்து துவையலாக சாப்பிட்டு வர மார்புச்சளி, இருமல் குணமாகும்.பொடுதலை இலையை நெய்விட்டு வதக்கி அதில் உளுந்து சேர்த்து அரைத்து துவையலாக்கி சாப்பிட மூலநோய் பெளத்திரம் குணமாகும்.இதன் இலையை சீரகம் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட
வெள்ளைப்படுதல் குணமாகும்.

விஷ்ணுகிராந்தி இலை

விஷ்ணு கிராந்தி சிறிய இலைகளைக் கொண்ட செடி வகையைச் சேர்ந்தது. ஈரப்பதமுள்ள இடங்களில் வளரக்கூடியது. நீலநிறம், வெள்ளை, செந்நிற மலர்களையும் கொண்டு பூக்கக் கூடியது.
கடுமையான விஷக்காய்ச்சலுக்கு சாறு எடுத்து சாப்பிட விஷக்காய்ச்சல் குணமாகும்.இச்செடி, வேர், பூ அனைத்தையும், நிழலில் உலர்த்தி பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட வாதம், பித்தம், இளைப்பு நோய்கள் குணமாகும்.

விஷ்ணுகிராந்தி, ஓரிதழ்தாமரை, கீழாநெல்லி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு காலை, மாலை சாப்பிட நரம்புத் தளர்ச்சி, வெட்டை சூடு குணமாகும். உடல் பலம் உண்டாகும்.விஷ்ணுகிராந்தி இலைப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால், சளி, இருமல் உடல் சூடு குணமாகும்.இதன் இலையை சுண்டைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து

The post மூலிகைகளும் பயன்களும்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED பிரசவத்துக்குப் பிறகான செப்சிஸ்…